இழப்பீடு வசூலிக்க புதிய வழிமுறை; ரியல் எஸ்டேட் சட்டத்தில் நடவடிக்கை
இழப்பீடு வசூலிக்க புதிய வழிமுறை; ரியல் எஸ்டேட் சட்டத்தில் நடவடிக்கை
ADDED : ஏப் 24, 2024 05:00 AM

சென்னை : வீட்டை ஒப்படைக்க தாமதிக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு வாரன்ட் பிறப்பித்து, இழப்பீடு, அபராதத்தை வசூலிப்பதற்கு, புதிய வழிமுறையை, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
வீடு வழங்குவதற்காக பணம் வசூலிக்கும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்தால், அது குறித்து பொது மக்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் செய்கின்றனர். இந்த புகார்களை விசாரிக்கும் ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறது.
இதை கட்டுமான நிறுவனங்கள் அலட்சியப்படுத்துகின்றன. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும், ஆணையத்தில் முறையிடுகின்றனர். அதை விசாரிக்கும் ஆணையம், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடுகிறது.
தமிழகத்தில், 2020 முதல் தற்போது வரை, 250க்கும் மேற்பட்ட வழக்குகளில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுகின்றன. இதனால், வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடும் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய வீட்டுவசதி அமைச்சகம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட உயர் நிலை கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, 'இந்த விஷயத்தில் குஜராத்தில் உள்ள நடைமுறைகளை பின்பற்றலாம்.
'அபராதம், இழப்பீட்டை கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கும் அதிகாரத்தை, மாவட்ட அளவிலான கூடுதல் மாஜிஸ்திரேட் அல்லது கூடுதல் கலெக்டர் ஆகியோருக்கு அளிக்கலாம். இதற்காக இவர்களை வருவாய் மீட்பு அலுவலர்களாக செயல்பட அனுமதிக்கலாம்' என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

