உதயநிதிக்கு வரவேற்பு பேனர் வைக்க மா.செ., தடையால் நிர்வாகிகள் கொதிப்பு
உதயநிதிக்கு வரவேற்பு பேனர் வைக்க மா.செ., தடையால் நிர்வாகிகள் கொதிப்பு
ADDED : செப் 11, 2024 03:53 AM

இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் பங்கேற்க வரும் அமைச்சர் உதயநிதிக்கு, சாலையின் இருபுறமும் வரவேற்பு பேனர்கள் வைக்க, தி.மு.க., மாவட்டச் செயலர் தடை போட்டதற்கு, அக்கட்சியில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில், ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன் ஆகியோரின் குருபூஜை விழாக்களில் பங்கேற்க வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது வாடிக்கை.
கடந்த ஆண்டில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு, ராமநாதபுரம் மாவட்டச் செயலர் முத்துராமலிங்கம் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று நடக்கவுள்ள இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவில், அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். அதையொட்டி, நிர்வாகிகளுக்கு முத்துராமலிங்கம் அனுப்பிய கடிதத்தில், உதயநிதி ராமநாதபுரம் வருவதை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
இது, தி.மு.க.,வில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, வேறு ஒரு கடிதம் எழுதி அனுப்பிய அவர், அதில் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் முன்னிட்டு உதயநிதி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதோடு நில்லாமல், 'உதயநிதியை வரவேற்று யாரும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க வேண்டாம். சாலையின் இருபுறம் கட்சி கொடிகள் நட்டால் போதும்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் அதிருப்தியில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'இமானுவேல் சேகரனின் குருபூஜை விழாவில், பங்கேற்க வரும் உதயநிதியை வரவேற்று, பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்பது நியாயமா? கட்சி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றால், முத்துராமலிங்கத் தேவரையும், இமானுவேல் சேகரனையும் சமமாகத்தான் பாவிக்க வேண்டும்.
கட்சியில் ஒரு சில நிர்வாகிகள் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு வரும் உதயநிதிக்கு, பிளக்ஸ் போர்டு வைக்கக் கூடாது என்கின்றனர்.
அப்படியென்றால், அதே நடைமுறையை முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்கும் பின்பற்றுவரா?' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
- நமது நிருபர் -