ஆவின் பால் கொள்முதல் மேலும் குறைந்தது: தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு
ஆவின் பால் கொள்முதல் மேலும் குறைந்தது: தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு
ADDED : ஏப் 07, 2024 01:49 AM

ஆவின் பால் கொள்முதல் மேலும் குறைந்துள்ளதால், பாக்கெட் பால் விற்பனையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் இரு மாதமாக வழங்கப்படவில்லை என, பால் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் தினமும் 2.06 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 30 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்கிறது. 2022 நவ., 5 முதல், பசும் பால் லிட்டருக்கு 35 ரூபாய்; எருமை பால் லிட்டர் 44 ரூபாய் என்ற விலையில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது.
தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வழங்குவதால், ஆவினுக்கு பால் கொள்முதல் குறைந்தது. ஆவின் நிறுவனம் லிட்டருக்கு 7 முதல் 10 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்துதல், ஊக்கத்தொகை மற்றும் தீவன மானியம் வழங்குவது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2023 நவ., 24ல் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் அதிகாரிகள், சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பேச்சு நடத்தினர். இது குறித்து, நம் நாளிதழில் டிசம்பர் 13ல் விரிவான செய்தி வெளியானது.
அன்றே முதல்வர் ஸ்டாலின், '2023, டிச., 18 முதல், ஆவின் பால் லிட்டருக்கு, ஊக்கத்தொகை 3 ரூபாய் வழங்கப்படும். பசும் பால் லிட்டர் 35 ரூபாயில் இருந்து 38 ரூபாய்; எருமை பால் லிட்டர் 44 ரூபாயில் இருந்து 47 ரூபாய் என விலை உயரும். ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிகளவில் பால் வழங்க வேண்டும்' என்று அறிவித்தார்.
கடந்த 2023 மார்ச்சில், ஆவினுக்கு தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்த நிலையில், 2024 மார்ச்சில், 25 முதல் 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் கொள்முதல் தொடர்பாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், மேலும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆவின் பால் வினியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் 9,500 கூட்டுறவு சங்கங்களில், 13 லட்சம் பேரிடம், ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது. 27 ஒன்றியங்கள் மற்றும் 750 இடங்களில் தலா 5,000 லிட்டர் வீதம் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் என, தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் கட்டமைப்பு வசதி உள்ளது. 2020ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, தினமும் 38 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் இருந்தபோது, வெண்ணெய், நெய், பால் பவுடர் போன்றவற்றின் இருப்பு தேவைக்கு ஏற்ப இருந்தது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பால் விற்பனை விலையில், லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த போது, அதற்குரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்கவில்லை.
இதனால், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் என, மூன்று ஆண்டுகளில் மொத்தம், 900 கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆவினுக்கு பால் கொள்முதல் குறைந்ததால், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் உள்ள தனியார் பால் நிறுவனங்களில் இருந்து கிலோ வெண்ணெய், 360 - 370 ரூபாய் விலை கொடுத்து, ஆவின் கொள்முதல் செய்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளாகவே வெண்ணெய் வாங்கி வந்து, பால் பவுடரில் கலந்து, பாக்கெட் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன், சென்னையில் பால் வினியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை ஆவினுக்கு வழங்கும்படி, தமிழக அரசு மீது விரைவில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
தற்போது, கடும் வெயில் தாக்கத்தால் வெப்ப அயற்சியில் கறவை மாடுகளில் பால் சுரக்கும் தன்மை குறைந்துள்ளது. ஒரு கறவை மாடு, தினமும் 30 - 50 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பருவ மழை பாதித்துள்ள பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததும், போதிய பசுந்தீவனம் இல்லாததும் பால் சுரப்பு குறைந்துள்ளதற்கு காரணம். ஆவின் நிர்வாகத்தில், தற்போதைய நிலையில் 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தால் ஓரளவுக்கு நிர்வாகம் செயல்படும். ஆனால், 25 லட்சம் லிட்டர் கொள்முதல் உள்ளதால், நெய், வெண்ணெய் பற்றாக்குறை உள்ளது.
கடந்த 2023 டிச., 18 முதல் தமிழக அரசு அறிவித்த, லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை, 2024 ஜன., 31 வரை வழங்கப்பட்டது. பிப்., முதல் மார்ச் வரை இரண்டு மாதங்களுக்கு, மொத்தம் 48.60 கோடி ரூபாய் வழங்கவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன், பால் உற்பத்தியாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு பின், ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.
இத்துறை அமைச்சர், அதிகாரிகள், ஊக்கத்தொகை தொடர்ந்து பெறுவதற்கு அரசின் நிதித் துறையிடம் வலியுறுத்தாததால், இத்தொகை கிடைக்கவில்லை. தற்போது, தேர்தல் விதிகள் காரணமாக, ஜூன் மாதம் வரை உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது.
குஜராத்தின், 'அமுல்' மற்றும் கர்நாடகாவின் 'நந்தினி' கூட்டுறவு பால் நிறுவனம், லிட்டருக்கு 42 முதல் 45 ரூபாயும்; தனியார் நிறுவனம் லிட்டருக்கு 45 ரூபாயும் வழங்குவதே, ஆவினுக்கு பால் குறைவதற்கு மற்றொரு காரணம்.
காங்., ஆளும் ஹிமாச்சல பிரதேசத்தில், பால் லிட்டர் 45 ரூபாய் என நிலையான விலை அறிவித்து, உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.முகமது அலி கூறியதாவது:
ஆவின் நிர்வாகம், 10 முதல் 13 சதவீதம் அளவில் தான் பால் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனம் லிட்டருக்கு 5 ரூபாய் கூடுதலாக தருவதால், ஆவினுக்கு பால் கொள்முதல் குறைந்து வருகிறது. கால்நடை தீவனத்துக்கு வழங்கிய மானியத்தையும் நிறுத்திவிட்டது.
பால் கொள்முதலை அதிகப்படுத்த ஆவினிடம் கொள்கை அணுகுமுறை சரியாக இல்லை. 4.30 கொழுப்பு மற்றும் 8.2 இதர சத்துகள் என, மொத்தம் 12.5 சதவீதம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதால், 60 சதவீதம் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில்லை. இவற்றை, 4.0 கொழுப்பு மற்றும் 8.0 இதர சத்துகள் என, 12 சதவீதமாக மாற்ற வேண்டும்.
ஆண்டுதோறும் பிப்., மற்றும் ஆக., மாதத்தில் நோய் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், பெயரளவில் இந்த தடுப்பூசி போடுவதால், இரண்டு ஆண்டுகளில், 1,000 கால்நடைகள் நோய் தாக்கத்தில் இறந்துள்ளது. சென்னையில் தினமும் 12 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது பால் கொள்முதல் குறைந்துள்ளதால், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் இருந்து, லிட்டர் 46 ரூபாய் அளவில் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், ஆவின் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டர் 38 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். 46 ரூபாயை ஆவின் வழங்கினால், அதிகளவில் பால் கொள்முதல் இருக்கும்.
கர்நாடகாவில், 1 கோடி லிட்டர் பால் உற்பத்தியில், 'நந்தினி' 50 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. குஜராத்தில், 1 கோடி லிட்டர் பால் உற்பத்தியில், 'அமுல்' 65 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தில் உள்ள ஆவின், 1 கோடி லிட்டருக்கு, 25 லட்சம் லிட்டர் தான் கொள்முதல் செய்கிறது. கூட்டுறவு நிறுவனங்களில் பால் கொள்முதலில் தமிழகம், 13வது இடத்தில் உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க., அறிக்கையில், தீவனம் மானியம், கொள்முதல் விலை உயர்வு போன்றவை எதிர்பார்த்த நிலையில், அதற்கான அறிவிப்பு இடம் பெறவில்லை. பால் கொள்முதல் இடத்தில், கொழுப்பு, இதர சத்து அளவீடு இயந்திரம் வைக்க வேண்டும் என, 2017ல் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால், பால் தொகுப்பு மையம் தவிர, கூட்டுறவு சங்கங்களில் இந்த இயந்திரம் இல்லை.
அமுல், நந்தினி கூட்டுறவு நிறுவனம், தமிழகத்தில் வேலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில், தினமும் 15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. மதுரை பகுதியில், கேரள தனியார் பால் நிறுவனம் சமீப காலமாக பால் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில், தமிழக அரசால் ஊக்கத்தொகையை வழங்க முடியாததால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பால் சப்ளையை அதிகரிக்க துவங்கியுள்ளனர். இன்றைய நிலை தொடர்ந்து நீடித்தால், அடுத்த ஆறு மாதங்களில் ஆவின் பால் கொள்முதல், 20 லட்சம் லிட்டருக்கு கீழ் குறைய வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -

