370 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் பா.ஜ., உறுதியாக நம்ப காரணம் என்ன?
370 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் பா.ஜ., உறுதியாக நம்ப காரணம் என்ன?
ADDED : மார் 27, 2024 05:26 AM

வரும் லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகள் இல்லாமல் பா.ஜ., மட்டும் 370 தொகுதிகளில் தனித்து வெற்றி பெறும் என, அக்கட்சி தலைமை உறுதியாக நம்புவதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அடுத்த மாதம் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை 44 நாட்களுக்கு ஏழு கட்டங்களாக நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., 440 இடங்களில் போட்டியிடுகிறது.
இதில், 90 சதவீதமான 402 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துவிட்டது.
கால அவகாசம்
இம்முறை, 'சிட்டிங்' எம்.பி.,க்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு, 'சீட்' மறுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பா.ஜ.,வின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும் உத்திகள் என கூறப்படுகிறது.
இம்முறை, 370 தொகுதிகளில் தனித்து வெற்றி பெறுவோம் என, பிரதமர் மோடி உறுதியாக நம்புவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அதில் முதலாவது காரணம், வேட்பாளர்கள் அறிவிப்பில் இருந்தே துவங்குகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள ஏப்., 19ம் தேதிக்கு ஒரு மாதம் முன்பே, வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக, வேட்பாளர்கள் தங்கள் தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் சென்று நிதானமாக பிரசாரம் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்கிறது.
இரண்டாவதாக, 100க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.பி.,க்கள் தயவு தாட்சண்யம் இன்றி ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
கட்சியின் பெரிய தலைகளான மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங்., அஸ்வினி சவுபே, மீனாட்சி லேகி மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய தலைவர்கள் சாத்வி பிரக்யா தாக்குர், ரமேஷ் பிதுரி, பிரவேஷ் வர்மா உள்ளிட்டோருக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை.
சாதகமான கணக்கு
யாருக்கெல்லாம் மீண்டும் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது என்று கட்சி கருதியதோ, அவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. எம்.பி.,க்கள் மீதான அதிருப்தியால், 370 என்ற இலக்குக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் பா.ஜ., தலைமை தெளிவாக உள்ளது.
மூன்றாவதாக, தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ., போட்ட கணக்கு மிகப் பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. தங்களுக்கு 370, கூட்டணியுடன் சேர்த்து, 400 தொகுதிகளை கைப்பற்ற தேவையான தொகுதிகளை கட்சித் தலைமை மிக கவனமாக தேர்ந்தெடுத்தது.
உதாரணமாக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், ஆறு தொகுதிகளில் பா.ஜ.,வின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
காங்., மெத்தனம்
பா.ஜ.,வின் வியூகம் இப்படியிருக்க, களத்தில் காங்கிரஸ் சற்று மெத்தனமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம், 280 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்., இதுவரை 193 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட, பா.ஜ.,வின் பெரும் தலைகள் போட்டியிட உள்ள தொகுதிகள் அனைத்துமே அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால், காங்., கோட்டையாக கருதப்படும் உ.பி.,யின் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்களை காங்., இன்னும் அறிவித்தபாடில்லை.
அங்கு ராகுல் மற்றும் பிரியங்கா போட்டியிடுவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தால், அதை அல்லவா காங்., தலைமை முதலில் அறிவித்து இருக்க வேண்டும். தலைவர்கள் முதல் ஆளாக களத்தில் இறங்கினால் தானே தொண்டர்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் பிறக்கும் என, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை பா.ஜ.,வும் அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
- நமது நிருபர் -

