கோவை பஸ்போர்ட்... தேவை இரு அரசுகளின் 'சப்போர்ட்!'
கோவை பஸ்போர்ட்... தேவை இரு அரசுகளின் 'சப்போர்ட்!'
ADDED : ஏப் 04, 2024 05:32 AM

''பஸ்ல ஊருக்குப் போறீங்களா...நீங்க பஸ் ஸ்டாண்ட்டுக்குப் போறதே ஊருக்குப் போறது மாதிரித்தான்!'' -சென்னைக்கான ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை, கிளாம்பாக்கத்துக்கு மாற்றியபோது, இது போல ஏகப்பட்ட 'மீம்ஸ்' வலம் வந்தன. கோவையில் பிரச்னையே வேறு.
ஒரு நகருக்கு ஒன்று அல்லது இரண்டு பஸ் ஸ்டாண்ட்கள் இருக்கலாம். ஆனால் இங்கே இருப்பது ஏழு பஸ் ஸ்டாண்ட்கள். இன்னும் ஒன்றைத் துவக்கினால் 'எட்டுத்திக்கும் பஸ் ஸ்டாண்ட் உள்ள ஒரே ஊர்' என்ற பெயர் வாங்கலாம்.
கோவையில் நகரின் மத்தியிலுள்ள காந்திபுரம் பகுதியில் மட்டுமே, சென்ட்ரல், டவுன்பஸ், அதி விரைவு மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் என, நான்கு பஸ் ஸ்டாண்ட்கள் அமைந்திருக்கின்றன. இதனால் அத்தனை பஸ்களும், நகரின் பல பகுதிகளைக் கடந்து உள்ளே வருகின்றன. இவை தவிர்த்து, சிங்காநல்லுார், உக்கடம் மற்றும் சாய்பாபா கோவில் ஆகிய இடங்களிலும், மூன்று பஸ் ஸ்டாண்ட்கள் அமைந்துள்ளன.
நகருக்குள் 2,000 பஸ்கள்!
கோவை நகரில் அரசு போக்குவரத்துக்கழகத்தால் மட்டுமே, ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, 430 தனியார் பஸ்கள், 500க்கு மேற்பட்ட ஆம்னி பஸ்கள், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து இயக்கப்படும் 200க்கும் அதிகமான இரு மாநில பஸ்கள் என, தினமும் கோவை நகருக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் வலம் வருகின்றன.
இதுவே நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க, மிக முக்கியக் காரணமாகவுள்ளது. இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, 2014ல், கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலின்போது, 'வெள்ளலுாரில் 50 ஏக்கர் பரப்பில் ரூ.125 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும்' என்று, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.,வென்றது.
அந்தத் திட்டம் அறிவித்து 10 ஆண்டுகளாகி விட்டது. இதில் ஏழு ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியும், மூன்றாண்டுகள் தி.மு.க., ஆட்சியும் நடந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், பஸ் ஸ்டாண்ட் மட்டும் இன்னும் வரவில்லை.
2016ல், ஜெயலலிதா மறைந்த பின்பு, முதல்வரான பழனிசாமி 2017ல், கோவையில் பஸ்போர்ட் அமைக்க, மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில், இதற்கு முழுமையாக நிதி ஒதுக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்தார்.
வெள்ளலுார் குப்பையால் வில்லங்கம்!
பஸ்போர்ட் என்பது, விமான நிலையங்களுக்கு இணையான வசதிகளைக் கொண்ட பஸ் போர்ட் என்று மத்திய அரசு விளக்கம் அளித்ததால், இந்த அறிவிப்பு கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சேலம் மற்றும் கோவை ஆகிய இரு நகரங்கள் மட்டுமே, பஸ்போர்ட் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன.
கோவைக்கு, வெள்ளலுாரில் கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் நியமித்த கன்சல்டன்ஸி நிறுவனம், கோவை வெள்ளலுாருக்கு வந்து ஆய்வு செய்தது.
வெள்ளலுார் குப்பைக் கிடங்கு அருகில் இருப்பதைக் காரணம் காட்டி, அந்த இடத்தை நிராகரிக்கப் பரிந்துரை செய்தது; அத்துடன் அணுகுசாலைகள் சரியாக இல்லை என்பதும் ஒரு காரணமாகப் பதியப்பட்டது.
அப்போதே, கோவையின் வேறு ஏதாவது ஒரு பகுதியில், இதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, மத்திய அரசிடம் ஒப்படைத்திருந்தால், பாரத்மாலா திட்டத்தில் பஸ்போர்ட் கட்டப்பட்டிருக்கும்.
அப்போது மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்ததால், கண்டிப்பாக நிதியுதவி கிடைத்திருக்கும். ஆனால் அப்போதிருந்த அரசு அதைச் செய்யவில்லை.
மாறாக, ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறி, அதே வெள்ளலுாரில் அதே இடத்தில், 61.62 ஏக்கர் பரப்பளவில், ரூ.168 கோடியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அணுவளவும் இல்லாத அணுகுசாலை!
மொத்த மதிப்பீட்டில், 50 சதவீதத்தொகையான ரூ.84 கோடியை தமிழக அரசு வழங்கும். மீதமுள்ள, 84 கோடி ரூபாயை மாநகராட்சி பொது நிதியில் இருந்து அல்லது வங்கியில் கடன் பெற்று செலவழிக்குமாறு, ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசின் நிதி வராமலே, மாநகராட்சியின் பொதுநிதியில் தொகை எடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கின.
பணிகள் வேகமாக நடந்தன. பல்வேறு பகுதிகளிலிருந்து பஸ்கள் வருவதற்கான அணுகுசாலைகள் இல்லாத நிலையில், பஸ்கள் எப்படி வருமென்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், திருச்சி ரோட்டிலிருந்து சிங்காநல்லுார் வழியாக, ஏழு கி.மீ., துாரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும்.
அதேபோல, 'எல் அண்ட் டி' பை-பாஸ் ரோட்டிலிருந்தும் பஸ்போர்ட்டுக்கும், அங்கிருந்து போத்தனுார் செட்டிபாளையம் வரையும் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.57 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்பின் அறிக்கையே தயாராகவில்லை.
பொள்ளாச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், ஈச்சனாரியிலிருந்து பஸ்போர்ட்டுக்கு வரும் வகையில், அந்த ரோட்டையும் 10 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்யவும், மாநில நெடுஞ்சாலைத்துறை மதிப்பீடு அனுப்பியது.
பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூ.168 கோடி என்றால், இந்த ரோடுகள் விரிவாக்கம், பாலங்கள் கட்ட பல நுாறு கோடி ரூபாய் தேவையென்பதால், அதற்கான நிதி குறித்த கேள்வி எழுந்தது.
ஆட்சியும் காட்சியும் மாறியது!
ஏற்கனவே, பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கே மாநில அரசு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி, மாநகராட்சி பொதுநிதியிலிருந்தே எடுக்கப்பட்டது. மேலும் செலவழிக்க நிதியில்லாத நிலையில், பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக 'டுபிட்கோ'வில் கடன் பெறுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்தது. அந்தத் தொகை கிடைப்பதற்குள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததுமே, வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகள் நிறுத்தப்பட்டன. வேறிடத்தில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்; இது வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் மூன்றாண்டாகியும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டுக்கு வேறு இடமும் தேர்வு செய்யப்படவில்லை. அரைகுறையாக நிறுத்தப்பட்ட கட்டடமும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படவில்லை.
இதனால், மக்களின் வரிப்பணம் ரூ.30 கோடி செலவழித்துக் கட்டிய கட்டடம், பாழடைந்து வருகிறது. இதுபற்றி வாயே திறக்காத முதல்வர் ஸ்டாலின், 'பாலம் கட்டுவதற்காக உருமாறியுள்ள உக்கடம் பஸ் ஸ்டாண்ட், ரூ.20 கோடியில் சீரமைக்கப்படும்' என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழக அரசின் மெத்தனத்தையும், நிர்வாகச்சீர்கேட்டையும் காட்டுகிறது.
வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான கோவைக்கு, பஸ் போர்ட் போன்ற ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மிகவும் அவசியம். இதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து, மத்திய அரசுக்குக் கொடுத்து, பஸ் போர்ட் அமைக்க வலியுறுத்த வேண்டியது, தமிழக அரசின் அதிமுக்கியக் கடமை. மத்திய அரசும் இதற்கு முன்னுரிமை அளித்து, கோவையில் பஸ்போர்ட் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.
கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு, புதிய எம்.பி.,யாக தேர்வாகிறவர்கள், ஒருங்கிணைந்து இதற்காக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டுமென்பதே, கோவை மாநகர மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு.

