துறைமுகத்தில் பறிமுதல் விபரங்கள் மறைப்பு; சுங்க அதிகாரிகள் நடவடிக்கையில் சந்தேகம்
துறைமுகத்தில் பறிமுதல் விபரங்கள் மறைப்பு; சுங்க அதிகாரிகள் நடவடிக்கையில் சந்தேகம்
ADDED : மார் 11, 2025 04:26 AM

சென்னை : சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு, பறிமுதலான பொருட்களின் விபரங்களை, சென்னை துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் உடனுக்குடன் வெளியிட மறுத்து வருகின்றனர். இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. இதன்கீழ், சுங்கத்துறையும், மத்திய வருவாய் புலனாய்வு துறையும் செயல்படுகின்றன.
கைது
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என, சர்வதேச பயணியர் வந்து செல்லும் இடங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பர். சட்ட விரோதமாக கடத்தி வரப்படும், தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வர்.
வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் கன்டெய்னர்களில், என்ன பொருட்கள் உள்ளன, அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கடத்தி வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், தொடர்புடையவர்களை கைது செய்யவும் வேண்டும்.
இதுகுறித்த விபரங்களை, மக்களுக்கு தெரிவிப்பதும் அவசியம். அதாவது, சம்பவம் எப்போது நடந்தது, கடத்தலில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர், கைதானவர்கள் எத்தனை பேர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு போன்றவற்றை வெளியிடுவது சுங்கத்துறையின் கடமை.
கடத்தல் வழக்குகள் விசாரணை நிலுவையில் இருக்கும் போது, துல்லியமான தகவல்கள் வெளியில் தெரிந்தால், சிலர் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாலும், ரகசியம் காக்க வேண்டிய காரணத்தாலும், சில முக்கிய விஷயங்களை வெளியிடுவதை அதிகாரிகள் தவிர்ப்பர்.
ஆனால், சென்னை துறைமுக சுங்க அதிகாரிகள், சமீப நாட்களாக அனைத்து தகவல்களையும் வெளியிட மறுக்கின்றனர். கடந்த மாதம் துறைமுகத்தில், சட்டவிரோதமாக, 2 கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய உதவிய, சுங்கத்துறை ஏற்றுமதி பிரிவு துணை கமிஷனர் சதீஷ்குமார் உட்பட நான்கு பேரை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
எதிர்பார்ப்பு
இதன்பின் கடந்த வாரம், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 18.2 கோடி ரூபாய் மதிப்பிலான வாட்ச்கள், எலக்ட்ரானிக் பொருட்களை, சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, கடந்த பிப்., 28லும், 13.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, அழகு சாதனம் மற்றும் விளையாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரண்டு பறிமுதல் விபரங்களும் வெளியாகவில்லை. இது, கடத்தலை மறைக்க அதிகாரிகள் உதவுகின்றனரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுபற்றி உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும். கடத்தலில் ஈடுபடுவோர் விபரங்களை, வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே, பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.