'க்ரீம் பன்'னால் வெடித்த சர்ச்சை: ஜிலேபி சாப்பிடலை என்கிறார் வானதி
'க்ரீம் பன்'னால் வெடித்த சர்ச்சை: ஜிலேபி சாப்பிடலை என்கிறார் வானதி
ADDED : செப் 14, 2024 05:15 AM

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொழில்துறை அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் 11ம் தேதி நடந்தது. இதில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசியதாவது:
எங்களுக்கு ஒரே ஒரு இஷ்யூ தான் மேடம். உங்க பக்கத்துல இருக்கற எம்.எல்.ஏ., வானதி எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர். வர்றப்பல்லாம் சண்டை போடுறாங்க. ஏன்னா, எங்களுக்கு நீங்க ஸ்வீட்டுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வச்சுருக்கீங்க. 'இன்புட்' குடுக்கறீங்க. சாப்பாட்டுக்கு 5 சதவீதம் வச்சுருக்கீங்க. 'இன்புட்' இல்லை. காரத்துக்கு 12 சதவீதம் வச்சுருக்கீங்க.
பேக்கரியில், பிரட்டும், பன்னும் விட்டுட்டீங்க. மீதி எல்லாத்துக்கும் 28 சதவீதம் வரை வச்சுருக்கீங்க. இந்தம்மா (வானதி) வர வேண்டியது; ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்து காபி குடிக்கணும், காரம் வேணும்ங்கறது.
காரத்துக்கு 12 சதவீதம்னு சொன்னா, உடனே சண்டைக்கு வர்றது. இது மாதிரி தினமும் எங்க வியாபாரத்துல பிரச்னை நடக்குது. ஒரே பில்லில், ஒரு குடும்பத்துக்கு விதவிதமாக ஜி.எஸ்.டி., போட்டுக் குடுக்கறது கஷ்டமா இருக்கு.
பன்னுக்கு ஜி.எஸ்.டி., இல்லை. பன்னுக்குள் கிரீம் வைத்தால், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., ஆகி விடுகிறது. கஸ்டமர், 'கிரீமையும், ஜாமையும் கொண்டாங்க. நானே வைத்துக் கொள்கிறேன்' என்கிறார். கடை நடத்த முடியல. அதனால், ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜாஸ்தி பண்ணிவிடுங்கள்.
இன்னொன்னு, உங்க எம்.எல்.ஏ., அம்மா தான் இதெல்லாம் பண்றது. எங்க தொகுதில இருக்காங்க. கடையில் வந்துட்டு, 'வடநாட்டுல அதிகம் ஸ்வீட் சாப்பிடுறாங்க. அதனால தான் அம்மா (நிர்மலா சீதாராமன்) அதற்கு 5 சதவீதமும், காரத்துக்கு 12ம் பண்ணிருக்காங்க' என்கிறார்.
நான் சொன்னேன்; அப்படி எல்லாம் இல்லை. தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காப்பி; அப்படித் தான் போகும். அதை தயவு செய்து 'கன்சிடர்' செய்யுங்கள் மேடம். இவ்வாறு கொங்கு பாணியில் நகைச்சுவையாக கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு மாநிலத்துக்கும், தனித்தனியாக வரி விதிப்பதில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே வரி விகிதம் தான்,” என்றார்.
அப்போது மீண்டும் பேசிய சீனிவாசன், “இந்தியாவுக்கு பூராவும் சேர்த்து ஏத்திவிட்டாலும் சரிங்க. ஒரே மாதிரி பண்ணுங்க. தனித்தனியா வைக்காதீங்க. ஒரு குடும்பம் வந்தா, பில் போடறதுக்குள்ள கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்.
“ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இன்புட்டுடன் கிரெடிட் எடுக்கறப்ப, ஒரே கிச்சன்ல தான் எல்லாம் பண்றாங்க. “இன்புட் எடுக்கும்போது, அதே காஸ், அதே ஸ்வீட் மாஸ்டர், அதே கடலை மாவு, அதே மைதா மாவு. இன்புட் எப்படிங்க மேடம் எடுக்க முடியும். ஆபிசர்ஸும் திணறுறாங்க. அவங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க,” என்றார்.
வட்டார வழக்கிலான அவரது பேச்சு அடங்கிய இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியது.
நேற்று முன்தினம் மாலை, நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, “அவர் பெரியவர். நீண்ட நாட்களாக தொழிலில் உள்ளார். அவர் ஸ்டைலில் பேசினார்; அதில் தவறில்லை,'' என்றார். அதன்பின், அன்னபூர்ணா சீனிவாசன் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., தலைவர் கார்கே முதல் தி.மு.க., -- காங்., -- சீமான் என, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வெளிநாட்டில் இருந்து இதற்கு வருத்தம் தெரிவித்தார். வானதி தன் பங்கிற்கு, “அவராக வலிய வந்து தான் மன்னிப்புக் கேட்டார்,” என, விளக்கம் கொடுத்தார்.