ADDED : மார் 09, 2025 01:34 AM

புதுடில்லி: வடமாநிலங்களில், பான்மசாலா போடும் பழக்கம் அதிகம். தற்போது, இது தமிழர்களுக்கும் தொத்தி விட்டது. பான்பராக் போட்டு, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதில், முதலிடம் வடமாநிலத்தவர்க்கு தான்!
சமீபத்தில் உ.பி., சட்டசபை வளாகத்தில், எம்.எல்.ஏ., ஒருவர் பான்மசாலா எச்சிலை சுவரில் துப்பி விட்டார்; சுத்தமாக வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில், இந்த பான்மசாலா கறை நன்றாக தெரிந்தது.
'எங்கும், எதிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என பிரதமரும், உ.பி., முதல்வரும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்படி செய்யலாமா?' என, கோபப்பட்ட உ.பி., சட்டசபை சபாநாயகர், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,வை கண்டித்தார்; ஆனால், அவருடைய பெயரை வெளியிடவில்லை.
இந்த விஷயம் தெரிந்த உடனேயே, பிரதமர் அலுவலகத்திலிருந்து, சபாநாயகருக்கு போன் வந்ததாம். 'இப்படி அசுத்தம் செய்தவரை சும்மா விடக்கூடாது. 'துாய்மையான இந்தியா' என, திட்டத்தை நிறைவேற்றி வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளே இப்படி செய்யலாமா? நிச்சயம், இதற்கு தண்டனை தர வேண்டும். யாராக இருந்தாலும் அந்த எம்.எல்.ஏ.,விற்கு ஒரு மாத சம்பளத்தை, 'கட்' செய்ய வேண்டும்' என கூறினாராம் பிரதமர்.