UPDATED : ஆக 10, 2024 03:12 AM
ADDED : ஆக 09, 2024 11:59 PM

திருப்பூர்;அழிந்துபோன தரவுகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளதால், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
தொழிலாளர் நலத்துறையின் கீழ், கட்டுமானம், உடல் உழைப்பு, ஆட்டோ, தெருவோர வியாபாரிகள், கடை ஊழியர், வாகன ஓட்டுனர் மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலவாரியம் உள்பட, 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர்.
நலவாரிய பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. தொழிலாளர்கள், ஆதார், ரேசன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், மொபைல் எண் ஆகிய விவரங்களுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள், வி.ஏ.ஓ., சான்றுபெற்று, இ-சேவை மையங்கள் மூலமாக வாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெறுகின்றனர்.
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர் மற்றும் குடும்பத்துக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, விபத்து மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
கடந்த 2023, டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த கன மழையால், தொழிலாளர் நலவாரிய சர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களின் தரவுகள் அழிந்துவிட்டதாக நலவாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, வாரியம் சார்ந்த பயன்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நலவாரியம் துரிதமாக செயல்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவேண்டும் என திருப்பூர் தொழிற் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
அவ்வளவு எளிதல்ல
சி.ஐ.டி.யு., பனியன் தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சம்பத்:
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த 45 லட்சம் தொழிலாளரின் தரவுகள் அழிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அதனால், நலவாரிய பதிவு புதுப்பித்தல், உதவித்தொகைகள், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க முடி யாத நிலைக்கு தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள், முதல் பதிவின்போது வழங்கிய அனைத்து ஆவணங்களோடு, நலவாரியத்தில் மீண்டும் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 45 லட்சம் தொழிலாளர் தரவுகளை மீண்டும் பதிவு செய்வது அவ்வளது எளிதானது அல்ல.
ஏற்கனவே நலவாரிய சர்வர் அடிக்கடி முடங்கிவிடுகிறது. வாரியத்தில் பதிவு செய்வதற்காகவும், உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்காகவும் தொழிலாளர்கள் இ-சேவை மையங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் அலைந்துகொண்டிருக்கின்றனர். ஒரு தொழிலாளியின் ஆவணத்தை பதிவு செய்வதற்கு, 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரமாகிவிடுகிறது.
அலைச்சல்...மன உளைச்சல்
தமிழகம் முழுவதும் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர் அனைவரின் விவரங்களையும் மீண்டும் பதிவு செய்யும்போது, சர்வர் கோளாறுகள், தொழிலாளருக்கு வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்படும்.
வாரிய பதிவின்போது, வெப் கேமரா மூலம் தொழிலாளரின் லைவ் புகைப்படம் எடுக்கப்படும். பதிவு செய்து அட்டை பெற்ற ஒரு தொழிலாளி, இடைப்பட்ட நாட்களில் இறந்துவிட்டால்,மீண்டும் பதிவு செய்ய முடியாது; இதனால், அந்த தொழி லாளியின் குடும்ப உறுப்பினர்கள், ஈமக்கிரியை, விபத்து மரண உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்து பெறமுடியாது.
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை கண்டறிந்து மீண்டும் பதிவு செய்வது தொழிற்சங்கங்களால் இயலாததாகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிக்கும்போது அல்லது உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அழிந்த தரவுகளை மீண் டும் பதிவேற்றம் செய்யுமாறு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இதனால், ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் நலவாரிய பதிவை இழக்க நேரிடும். ஓய்வூதியம் உள் பட உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிப்பது குறித்து நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நலவாரிய அலுவலகங்களிலேயே, தொழிலாளர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
ஏற்கவே முடியாது
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் சேகர்:
தொழிலாளர் நலவாரிய பதிவுகளை தனியார் நிறுவனம் பராமரித்துவருகிறது. திடீரென தரவுகள் அனைத்தும் அழிந்து போய்விட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது. தமிழக அரசு தனிக்குழு அமைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும். அழிந்த தரவுகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் உள்ளனர். ஆனால், 1.30 லட்சம் பேர் மட்டுமே வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அமைப்புசாரா தொழிலாளர் அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தமிழகம் முழுவதும் நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டிருக்கவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 17 பேருக்கு மட்டுமே வீடு கொடுக்கப்பட்டுள்ளது. சிக்கலான விதிமுறைகளே இதற்கு காரணம். விதிமுறைகளை தளர்த்தி, வாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர் அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்யவேண்டும்.