'டில்லி உஷ்ஷ்ஷ்...!' எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல்?
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல்?
UPDATED : செப் 08, 2024 03:45 AM
ADDED : செப் 08, 2024 03:42 AM

மஹாராஷ்டிராவில் தற்போது பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் உள்ளனர்.
நவம்பரில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது; எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் இதற்கான அறிவிப்பை வெளியிடும்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணியாக உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை இரண்டு கூட்டணிகளும் துவங்கி விட்டன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. இதில், மறைந்த காங்., தலைவர் படங்ராவ் கதம் என்பவரின் சிலையை ராகுல் திறந்து வைத்தார். கூட்டணி கட்சி தலைவர்களை இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் அழைத்திருந்தது. சரத் பவார் பங்கேற்றார்; உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை.
படங்ராவ் கதமின் மகன் விஸ்வஜித் கதம்; காங்., - எம்.எல்.ஏ.,வான இவருக்கும், உத்தவ் தாக்கரேவிற்கும் ஆகாது. 'சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தன்னைத் தான் எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும்' என்கிறாராம் உத்தவ்; ஆனால் காங்கிரஸ் இதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தான் இந்த புறக்கணிப்பு என சொல்லப்படுகிறது.
தன் தந்தையின் சிலை திறப்பு விழாவிற்காக விஸ்வஜித், 50 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1.5 லட்சம் பேர் இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
முதல்வர் பதவிக்கு போட்டியிடவே இவ்வளவு செலவு செய்துள்ளாராம் விஸ்வஜித். 'பா.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது கடினம்' என சொல்லப்படும் நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பது பா.ஜ., தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.