பிரதமர் மோடி படத்தை பயன்படுத்த அனுமதி கோரி ஈஸ்வரப்பா வழக்கு
பிரதமர் மோடி படத்தை பயன்படுத்த அனுமதி கோரி ஈஸ்வரப்பா வழக்கு
UPDATED : ஏப் 07, 2024 01:54 AM
ADDED : ஏப் 06, 2024 11:47 PM

பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பயன்படுத்த பா.ஜ., எதிர்ப்பு தெரிவிப்பதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், கட்சியின் அதிருப்தி தலைவரான ஈஸ்வரப்பா மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாவேரி லோக்சபா தொகுதியில், தன் மகன் காந்தேஷை களமிறக்க, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா விரும்பினார். ஆனால், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை பா.ஜ., மேலிடம் வேட்பாளராக அறிவித்தது.
சர்ச்சை
கொதிப்படைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தயாராகி வருகிறார்.
தன் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஈஸ்வரப்பா பயன்படுத்தி வருகிறார். இது, சர்ச்சைக்கு காரணமாகி யுள்ளது. இதற்கு, பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனால் எரிச்சல்அடைந்த ஈஸ்வரப்பா, 'பிரதமர் மோடி, ராகவேந்திராவின் அப்பன் வீட்டு சொத்தா? பிரதமர் படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்' என, காட்டமாக பேசினார்.
எதிர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து, ஷிவமொகா மாவட்ட பா.ஜ.,வினர் ஆலோசித்து வருகின்றனர்.
இது பற்றி அறிந்த ஈஸ்வரப்பா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'பிரதமர் மோடி படத்தை என் பிரசாரத்தில் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. இருப்பினும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என எதிர்பார்த்து, கேவியட் மனு தாக்கல் செய்துள்ளேன்.
'அப்படி வழக்கு தொடரப்பட்டால், என் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது' என, கோரப்பட்டுள்ளது
- நமது நிருபர் -.

