போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தால் 'டிஸ்மிஸ்'
போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தால் 'டிஸ்மிஸ்'
ADDED : ஆக 09, 2024 12:17 AM

புதுடில்லி: 'அரசுப் பணியில் போலி சான்றிதழ், தவறான தகவல்கள் தந்து சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாழ்நாள் தடை
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்படுவோரில் சிலர், போலி சான்றிதழ் மற்றும் தவறான தகவல்கள் தந்து பணியில் சேர்வதாக புகார் எழுந்தது.
இவ்வாறு மோசடி செய்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பூஜா கேத்கரின் தேர்ச்சி சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது; தேர்வெழுதவும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
சிவில் சர்வீஸ் பணியில் இது போன்ற மோசடியில் ஈடுபடுபவரை அடையாளம் காண, மத்திய பணியாளர் நலத் துறை எடுத்த நடவடிக்கை குறித்து ராஜ்யசபாவில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. மத்திய பணியாளர் நல இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதில்:
உத்தரவு
ஒரு பணியாளர் போலியான ஜாதி சான்றிதழை சமர்ப்பித்தது நியமன அதிகாரிக்கு தெரிந்தால், சம்பந்தப்பட்ட சேவை விதிகளின்படி அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்க வேண்டும்.
ஜாதி சான்றிதழ்களை வழங்குவதும், சரிபார்ப்பதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பு. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.
மாவட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நியமன அதிகாரிக்கு தெரியபடுத்த வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் சரிபார்ப்பு குறித்த தகவல்கள் வரவில்லை என்றால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் இணைந்து சரிபார்ப்பு பணியை முடிக்கவும் நியமன அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
---