இ-பாஸ் நடைமுறை வரமா... சாபமா...? உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கருத்து
இ-பாஸ் நடைமுறை வரமா... சாபமா...? உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கருத்து
UPDATED : மே 08, 2024 06:22 AM
ADDED : மே 07, 2024 11:28 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் இ-பாஸ் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் தெரிவித்த கருத்து:
கணபதி, சுற்றுலா பயணி, போரூர், சென்னை: இ--பாஸ் நடைமுறை என்பது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும். சுற்றுலா பயணிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் இ-பாஸ் தேவைப்படாது.
இ-பாஸ் பதிவும் சில நிமிடங்களில் கிடைத்தது. இந்த சிஸ்டம் எளிமையாக உள்ளது. அதே போல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இதனை வழங்கினால் சுற்றுலாவில் ஏமாற்றம் இருக்காது.
மாதவன், சுற்றுலா பயணி, சேதுநாராயணபுரம், விருது நகர்: ஊட்டி- கொடைகானலுக்கு இ-பாஸ் உத்தரவு என்னை பொருத்தமட்டில் சரியானது. நான், 6ம் தேதி இ-பாஸ் இல்லாமல் ஊட்டிக்கு வந்துவிட்டேன். எனது நண்பர்கள் மற்றும் ஊரில் இருந்துவந்தவர்கள் இ-பாஸ் வாங்க காத்துள்ளனர். அவர்களுக்கும் எளிமையாக கிடைத்தால் சுற்றுலா மகிழ்ச்சியாக முடியும்.
ஹரி ராமகிருஷ்ணா, சுற்றுலா பயணி, கோவை: நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் அமல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. வாகனங்களில் யார், யார் செல்கின்றனர் என்பதும் எத்தனை பேர் செல்கின்றனர் என்பது குறித்த கணக்கீடு செய்வது மிகவும் நல்லது. இதனால், அவசர காலங்களில் இதனை ஆய்வு செய்ய முடியும்.
![]() |
பரிமளா, மகளிர் குழு ஒருங்கிணைபாளர், குன்னுார்: நீலகிரிக்கு வருவதற்காக, இ-பாஸ் பதிவு செய்தவர்களின் எண்களை மொபைலில் 'க்யூ ஆர்' கோடு மூலம் ஸ்கேன் செய்து, 'வேலிட்' என இருந்தால் அனுமதிக்கிறோம். 'அன்வேலிட்' என, வரும் பட்சத்தில் மீண்டும் பதிவு செய்து அனுப்பி வருகிறோம்.
அர்ஜூன், சுற்றுலா பயணி, கேரளா:- இ--பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும்.
அஜிபீன், கூட்ஸ் வாகன ஓட்டுனர், கேரளா:- ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு, கோடை சீசனில், வந்து செல்லும் வாகனங்கள் இ--பாஸ் நடைமுறைப்படுத்தியது சரியான நடவடிக்கை.
அதே நேரம், கூடலுார் வழியாக கேரளா, கர்நாடகா இடைய இயக்கப்படும், கூட்ஸ் வாகனங்களுக்கு, இ--பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஹரிராமன், மெடிக்கல் கடை, பந்தலுார்: நீலகிரிக்குள் நுழைவதற்கு இ--பாஸ் நடைமுறைப்படுத்தி உள்ளது வரவேற்க கூடியது. குடும்பத்தினருடன் வந்து தங்கி மகிழ்ச்சியாக செல்ல வரும் கூட்டம் குறைவு. இவர்களுக்கு இ-பாஸ் எவ்வித பிரச்னையும் இல்லை. எவ்வித பதிவுகளும் இல்லாமல் ஜாலியாக இருக்க வரும் இளைஞர் கூட்டம் பதிவு செய்ய தயங்கி வேறு பகுதிகளுக்கு செல்லும். இதனால், இங்கு பிரச்னைகளும் குறையும்.
சங்கீதா, பிதர்காடு, பந்த லுார்: --நீலகிரிக்குள் வருவதற்கு இ--பாஸ் நடைமுறை வரவேற்க கூடியது என்ற போதும், மாநில எல்லையாக உள்ள, பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் வாழும் பலர், கர்நாடகா, கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களை வைத்துள்ளோம்.
இவர்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க, நடவடிக்கை வேண்டும். இ-பாஸ் வந்ததால், சீசனின் போது கூட்டம் குறையும் என்பதால், உள்ளூர் மக்களும் பயன் ஏற்படும்.
முகமது பரூக், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர், நீலகிரி: நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை படுத்தப்பட்டதால், வியாபாரிகள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
கோடை சீசனுக்காக கடன் பெற்று பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு வேளை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால், ஒரு குழப்பமான சூழ்நிலை வியாபாரிகள் மத்தியில் உள்ளது.


