இரவோடு இரவாக லோடு லோடாக கடத்தப்படும் மண்!: வருவாய்த்துறை, கனிம வளத்துறையினர் வேடிக்கை
இரவோடு இரவாக லோடு லோடாக கடத்தப்படும் மண்!: வருவாய்த்துறை, கனிம வளத்துறையினர் வேடிக்கை
ADDED : செப் 05, 2024 05:48 AM

கோவை: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்துார், அன்னுார், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, லோடு லோடாக மண் கடத்திச் செல்லப்படுகிறது. அவற்றை தடுக்க வேண்டிய வருவாய்த்துறையினரும், கனிம வளத்துறையினரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
கோவை மாவட்டத்தின் மேற்குப்புறநகரான தொண்டாமுத்துார் வட்டார பகுதியின் மூன்று புறங்களும் மேற்குத்தொடர்ச்சி மலையை அரணாக கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. சில ஆண்டுகளாக, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிடப்பட்டது. கனிம வளத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, மண் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது போலீசில் புகார் அளித்தனர்.
தொண்டாமுத்துார் ஸ்டேஷனில் வழக்கும் பதியப்பட்டது. அதன்பின், சில மாதங்கள் மண் கொள்ளையடிப்பது நிறுத்தப்பட்டது.
மீண்டும் மண் கடத்தல்
தற்போது, மங்களபாளையம், மூங்கில் மடை குட்டை, மூலக்காடு, வெள்ளிமலைப்பட்டிணம் ஆகிய பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா நிலங்களில், மீண்டும் அனுமதியின்றி, கிராவல் மண் மற்றும் செம்மண் வெட்டி எடுத்து, டிப்பர் லாரிகளில் கொள்ளையடிக்கத் துவங்கியுள்ளனர்.
அன்னுாரில் அக்கரை செங்கப்பள்ளி மற்றும் குப்பனுார் ஊராட்சிகளில் சில மாதங்களாக லோடு லோடாக மணல் எடுத்து விற்கப்படுகின்றன. குறிப்பாக, அக்கரை செங்கப்பள்ளி, வாக்கனாம் கொம்பு, அழகேபாளையம், சொலவம்பாளையம், ஆத்தி குட்டை ஆகிய ஊர்களில் மண் எடுக்கப்படுகிறது.
சில இடங்களில் பட்டா நிலத்தில், உரிமையாளரின் பெயரில் கனிம வளத் துறையில் அனுமதி பெறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, மூன்று முதல் ஐந்து மடங்கு ஆழத்துக்கு மண் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஒரே பர்மிட்டை வைத்து ஐந்து லோடுகள் ஓட்டப்படுகின்றன. பல்வேறு கம்பெனிகளுக்கு சொந்தமாக பல நுாறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. கண்காணிப்பு இல்லாத அந்த நிலங்களிலும் உரிய அனுமதி இல்லாமல், லோடு கணக்கில் மண் எடுத்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
வண்டல் மண் கடத்தல்
மேட்டுப்பாளையம் தாலுகாவில், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் 'ஆன்லைன்' வாயிலாக 'பெர்மிட்' பெற்று, லாரிகளில் வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் பெயரில் பெர்மிட் வாங்கியுள்ள சிலர் வண்டல் மண்ணை இரவு நேரங்களிலும் எடுக்கின்றனர். அவற்றை மதுக்கரை, பொள்ளாச்சி பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.
கேரளாவுக்கு கடத்திச் சென்று கிராவல் மண்ணாக விற்பனை செய்கின்றனர். இரவு, பகலாக நடக்கும் இதுபோன்ற கனிம வள கொள்ளையை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, மண் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
'கடும் நடவடிக்கை அவசியம்'
'நமது நிலம், நமதே' விவசாயிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
அக்கரை செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர், வடக்கு வருவாய் ஆய்வாளர் மற்றும் கனிம வளத்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்து விட்டோம். இரண்டு, மூன்று முறை வாகனங்களை சிறை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். ஆனாலும், தினமும் பல நுாறு லோடு மண் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.
மழைநீர் செல்லும் பாதை மறைந்து விட்டது. மழை நீர் தேங்கி நிற்கும் இடங்கள் அதிக குழியால், நீர் தேங்காமல் உறிஞ்சப்படுகிறது. கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புற்கள் மண்ணுக்காக அழிக்கப்பட்டு தோண்டப்பட்டதால், கால்நடை வளர்ப்போர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மண் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில், கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும்.
அரசு நிர்ணயித்ததை விட விதிமுறை மீறி, எங்கெங்கு ஆழமாக மண் எடுக்கப்பட்டுள்ளதோ, அங்கு நில உரிமையாளர் மற்றும் மண் எடுத்தோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மணல் கடத்தலை வருவாய்த்துறை, போலீஸ், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட துறையினரோடு இணைந்தே தடுக்க முடியும். கோவையில் மணல் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு, சிறப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்வோம்.
கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் மணல் மற்றும் கிராவல் மண் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அனைத்து துறையினருடன் இணைந்து மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.
மணல் கொள்ளை நடக்கிறதா என்று, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர்களிடம் விசாரித்து தகவல் சேகரித்து, நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம்.
- விஜயராகவன்,
கனிம வளத்துறை உதவி இயக்குனர்,
கோவை மாவட்டம்