பணம் பதுக்கல் விவகாரம்: தமிழக பா.ஜ.,வில் பூதாகரம்; தனி குழு அமைத்து விசாரிக்கப்படும்?
பணம் பதுக்கல் விவகாரம்: தமிழக பா.ஜ.,வில் பூதாகரம்; தனி குழு அமைத்து விசாரிக்கப்படும்?
ADDED : மே 03, 2024 04:57 AM

சென்னை: லோக்சபா தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை, தமிழக பா.ஜ.,வில் பல நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடம் தனி குழு அமைத்து விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடந்தது. பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் அக்கட்சி 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட பூத் ஏஜன்ட்கள் ஐந்து பூத்களுக்கு பொறுப்பாளரான சக்தி கேந்திரா நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகளை கவனிக்க கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் செலவு தொகை வழங்கப்பட்டது.
அதன்படி ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்தப் பணத்தில் ஒரு பூத்திற்கு 50,000 ரூபாய் வரையும்; மண்டல நிர்வாகிகளுக்கு தலா 20,000 ரூபாய்; மாவட்ட நிர்வாகிகளுக்கு தலா 30,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பணம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல தொகுதிகளில் கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை முழுதுமாக கட்சியினருக்கு வழங்காமல் நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல தேனி, ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தரப்பில் தரப்பட்ட பணத்தையும் பா.ஜ., நிர்வாகிகள் பதுக்கி விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பணம் பதுக்கிய விவகாரம் தொடர்பாக, பல தொகுதிகளில் பா.ஜ., நிர்வாகிகள் இடையே மோதலும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சென்னை, மதுரை தொகுதிகளில் இருந்து மேலிடத்திற்கு புகார் அனுப்பி வருகின்றனர். தொகுதிகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டும் வருகின்றன.
இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் செலவுக்கு வழங்கிய பணம் முறையாக கட்சியினருக்கு செலவிடப்பட்டதா என்பதை மேலிடம் ஆய்வு செய்ய வேண்டும். பணம் பதுக்கிய விவகாரத்தில் மாநில நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெறுகின்றன. எனவே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பிற மாநில தலைவர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.
அவர்கள் வாயிலாக ஒவ்வொரு தொகுதியிலும் பணியாற்றிய தொண்டர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். அப்போது கட்சி மேலிடத்திற்கு தேர்தல் செலவு குறித்த உண்மை விபரம் தெரியவரும். பணம் பதுக்கியவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.