பிரதமர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் துவக்கம்: பயனாளிகள் கணக்கெடுப்புக்கு புதிய விதிகள்
பிரதமர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் துவக்கம்: பயனாளிகள் கணக்கெடுப்புக்கு புதிய விதிகள்
ADDED : ஆக 31, 2024 01:55 AM

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், 2016 - 17 முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட, மத்திய அரசு சார்பில் 1.11 லட்சம் ரூபாய், மாநில அரசு சார்பில், 1.72 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 2016 - 17 முதல் 2020 - 21 வரை, மொத்தமாக 2.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இத்திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
பிரதமராக மோடி மூன்றாம் முறை பொறுப்பேற்ற பின், இந்த திட்டத்தை நடப்பாண்டு முதல் 2028 - 29ம் ஆண்டு வரை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயனாளிகள் கணக்கெடுப்பை புதிதாக நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகள் விபரத்தை கணக்கெடுக்க, ஊராட்சி செயலரை கணக்கெடுப்பாளராக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள பயனாளிகளில் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்ய வேண்டும். தகுதியான புதிய பயனாளிகளை சேர்க்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, 'ஆவாஸ் பிளஸ்' மொபைல் போன் செயலியில், பயனாளி முகத்தை படம் பிடித்து, அவர் குறித்த விபரங்களை சேகரிக்க வேண்டும்.
மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் இயந்திரங்கள் வைத்திருப்போர், 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள வரம்பில், கிசான் அட்டை வைத்திருப்போர், குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் அரசு பணியில் இருந்தால், பயனாளிகளாக தேர்வு செய்யப்படக்கூடாது.
அரசிடம் பதிவு செய்யப்பட்ட வேளாண் சாராத நிறுவனம் வைத்திருந்தாலோ, குடும்ப உறுப்பினர் யாரேனும் மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாலோ, வருமான வரி, தொழில் வரி செலுத்தினாலோ, பயனாளிகளாக சேர்க்கக்கூடாது.
மேலும், நீர் பாசன நிலம் 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் வைத்திருந்தாலோ, நீர் பாசனமற்ற நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் வைத்திருந்தாலோ பயனாளியாக சேர்க்கக் கூடாது.
இவ்வாறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
'பயனாளிகள் கணக்கெடுப்பு பணியை, ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த ஊராட்சியில் உள்ள மக்கள் நலப் பணியாளர் அல்லது 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' போன்றோரை நியமிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா கடிதம் அனுப்பி உள்ளார்
- நமது நிருபர் -.