பா.ம.க., இளைஞரணி தலைவராகியும் செயல்பட முடியாத ராமதாஸ் பேரன்
பா.ம.க., இளைஞரணி தலைவராகியும் செயல்பட முடியாத ராமதாஸ் பேரன்
ADDED : மார் 07, 2025 06:08 AM

சென்னை : பா.ம.க., நிர்வாகிகள் அனைவரும், கட்சி தலைவர் அன்புமணி பக்கம் இருப்பதால், இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட ராமதாஸ் பேரன் முகுந்தன் பரசுராமன், கட்சியில் செயல்பட முடியாத நிலையில் உள்ளார்.
புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 28ல் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக, முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
அதிர்ச்சி
அதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, 'கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களான ஒருவருக்கு, இளைஞர் அணி தலைவர் பதவியா?' எனக் கேள்வி எழுப்பினார்.
பொதுமேடையில் வைத்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பை மகன் அன்புமணி பகிரங்கமாக எதிர்க்கிறாரே என அதிர்ச்சியடைந்த ராமதாஸ், கோபமாகி உரத்த குரலில், 'பா.ம.க., நான் உருவாக்கிய கட்சி. யாராக இருந்தாலும், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் கட்சியில் இருக்க முடியாது' என்று அதிரடியாக கூறினார்.
முகுந்தன் பரசுராமன், ராமதாசின் மகள் வழி பேரன். அதாவது அன்புமணியின் அக்கா மகன். எனினும், குடும்பத்திலிருந்து வேறொருவர் அரசியலுக்கு வந்து வளர்ந்தால், அது தனக்கு சிக்கலாகி விடும் என நினைத்தே அன்புமணி, அப்பா ராமதாஸின் அறிவிப்புக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, அன்புமணி பனையூரில் தனி அலுவலகம் அமைத்து, கட்சியை நடத்தி வருகிறார்.
எதிர்ப்பு
இந்நிலையில், முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி அளிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. எனினும், அவர் கட்சிப் பணிகள் எதிலும் ஈடுபடவில்லை. இதனால், அவர் அப்பதவியில் நீடிக்கிறாரா என்ற சந்தேகம், கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
இளைஞர் அணி பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பாகக் கூட, கட்சியினர் பலரும் அவரை தினந்தோறும் சந்தித்து வந்தனர். அறிவிப்புக்குப் பின், அவரை சந்தித்து வந்த கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்திப்பதை நிறுத்திவிட்டனர்.
இதுகுறித்து, பா.ம.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை, ராமதாஸ் அறிவித்தாலும், அவர் என் தேர்வு அல்ல என்பதை கட்சியினருக்கு தெரிவிக்கவே, அன்புமணி மேடையிலேயே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
கட்சியின் தலைவராக அன்புமணி செயல்படும் சூழலில், கட்சியின் எதிர்காலமும் அவருடைய கையில் தான் உள்ளது. இந்த சூழலில், அவருடைய கருத்துக்கு விரோதமாக செயல்பட கட்சியினர் விரும்பவில்லை. அதனாலேயே, முகுந்தனை சந்திப்பதையே கட்சியினர் பலரும் தவிர்த்து விட்டனர். கட்சியினர் ஆர்வம் காட்டாததால், முகுந்தனும் அரசியலில் வேகம் காட்டாமல் அமைதியாகி விட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.