வறுத்தெடுக்கும் 'ஆப்'கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!
வறுத்தெடுக்கும் 'ஆப்'கள்! சூடாக சாப்பிட்டால் குறைந்த விலை; பார்சலில் அய்யோ தாங்க முடியலை!
ADDED : ஆக 06, 2024 06:22 AM

கோவை : ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால், உணவு டெலிவரி நிறுவனங்கள் வழக்கத்தை விட பல மடங்கு விலையை உயர்த்தி விடுவதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது வழக்கம். தற்போது இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நமது வசதிக்காகவே ஆன் லைனில் ஆர்டர் செய்கிறோம். அதற்காக சற்று கூடுதல் விலை கொடுப்பதில் தவறில்லை என ஒருதரப்பினர் கூறுகின்றனர். அதற்காக, நேரில் செல்வதற்கும் ஆன்லைன் ஆர்டருக்குமான விலை வித்தியாசம் மிக அதிகமாக இருப்பது, பகல் நேர வழிப்பறி.
இந்த கட்டணங்களை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என, மற்றொரு தரப்பினர் எதிர் கருத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஓட்டல் நிர்வாகம், வினியோகிப்பவர் என மூன்று தரப்பினரிடமும் பேசினோம்.
நவநீதன், கல்லுாரி மாணவர், ஒண்டிப்புதுார்:
நண்பர்களுடன் சேர்ந்தோ, தனியாகவோ வழக்கமான உணவுக்குப் பதில் வேறு உண்ணலாம் என நினைத்து ஆர்டர் செய்கிறோம். வீட்டில் யாரும் இல்லாத போது, நேரில் செல்வதற்குப் பதில் ஆர்டர் செய்கிறோம். ஆனால், டெலிவரி சார்ஜ், அதற்கு வரி, பார்சலுக்கு தனி கட்டணம், அதற்கு வரி என ரொம்பவும் அதிகமாகவே, கட்டணம் வசூலிக்கின்றனர்.
விலையை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகிவிடுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் இருந்து, சேவை என்ற பெயரில் சுரண்டுவதாகவே கருதுகிறேன்.
உணவின் அளவும் சற்று குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். கட்ட ணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.
செல்வகுமார், உணவு டெலிவரி செய்பவர்:
இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறது. இன்னொருவரிடம் கைகட்டி நின்று பணிபுரியத் தேவையில்லை. தினமும் ரூ.700 முதல் ரூ.1,600 வரை சம்பாதிக்கலாம். டெலிவரி செய்யும் தூரத்தைப் பொறுத்து, ஒரு பார்சலுக்கு இவ்வளவு எனக் கிடைக்கும்.
வடவள்ளியில் இருந்து, ஐ.ஓ.பி., காலனிக்குச் சென்றால், வார நாட்களில் ரூ.35; வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரூ.50 கிடைக்கும். இன்று (நேற்று) மதியம் 1:00 மணியில் இருந்து 3:00 மணிக்குள் 5 ஆர்டர்களை முடித்தால், ரூ.400 கிடைக்கும் என ஆபர் உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் நிறைய ஆபர்கள் கிடைக்கின்றன. இருதரப்புக்குமே பயன்தான்.
வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், இரவுப் பணி முடிந்து தனியே வசிப்பவர்கள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில் இருப்பவர்கள் என, பலருக்கும் இது வசதியாக இருக்கிறது. இளைஞர்கள், குடும்பத்தினர் என மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும் ஆர்டர் செய்கின்றனர். இதுவரை விலை அதிகம் என எந்த வாடிக்கையாளரும் சொன்னதில்லை.
கதிர்வேல், இன்ஜினியர், விநாயகபுரம்:
தேவைக்காகவே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறோம் என்பதை மறுக்கவில்லை. பெற்றோர் இல்லாதபோது, ஆர்டர் செய்து சாப்பிடத் தோன்றும். ஒரு பிரபல ஓட்டலில் நேரில் சென்று சாப்பிட்டால், இரண்டு இட்லி 49 ரூபாய். அதுவே ஆன்லைனில் ஆர்டர் செய்தால், 110 ரூபாய். இரண்டு மடங்குக்கும் மேல் விலை அதிகம். நியாயமான கட்டணத்தைச் சேர்த்தால் பரவாயில்லை. இது ரொம்பவே அதிகம். அரசு தலையிட்டு முறைப்படுத்தலாம்.