ஆய்வு நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம்
ஆய்வு நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம்
ADDED : ஜூலை 01, 2024 05:31 AM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், தேசிய ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டது சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணையும்; ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் கமிஷனும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய நிர்வாகிகள், கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்தனர். கடந்த 26ம் தேதி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா ஆய்வு நடத்தினார்.
அதேநாளில், தமிழகதாழ்த்தப்பட்டோர் ஆணையமும், கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்தியது. அதுகுறித்த அறிக்கை சர்ச்சையாகி உள்ளது.
இகுறித்து, மனித உரிமை ஆர்வலர்கள்கூறியதாவது:
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தும்போது, மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம்விசாரணை நடத்தத் தேவையில்லை. கள்ளச்சாராய பலிகள் நடந்த உடனே, மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரித்திருக்க வேண்டும்.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தும் வரை, மாநில ஆணையம் அமைதியாக இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துவிடுமோ என்ற அச்சத்தில், மாநில ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
மாநில ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 'கள்ளச்சாராய மரணத்தில், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே, பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989-ன் விசாரணை வரையறைக்குள் இப்பிரச்னையை அடக்க இயலாது' என கூறப்பட்டுள்ளது.
ஆனால், மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இந்தக் கருத்து தவறானது. கள்ளச்சாராய வழக்கில் கைதான ராமர், சின்னத்துரை, ஜோசப் ராஜா ஆகியோர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூவரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்களால், பட்டியல்இனத்தைச் சேர்ந்தோர் இறந்துபோனால், எஸ்.சி,- எஸ்.சி, வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 3(2)(v)யின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என,சட்டம் கூறுகிறது.
தவிர, கள்ளச்சாராய சம்பவம் குறித்து மாநில எஸ்.சி, - எஸ்.டி., ஆணையம் ஆய்வு நடத்தச் சென்ற 3 பேர் குழுவில், சட்ட வல்லுநர்கள் என எவரும் இல்லை.
இந்த விஷயத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எதுவும்செய்யவில்லை என்ற கெட்டப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, அவசர அவசரமாக ஆய்வு நடத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வு செய்தது எங்களுக்கு தெரியாது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, 10 புகார்கள் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் மட்டும் தான் இந்திய தண்டனை சட்டப்பிரிவு - 302ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்தது திட்டமிட்ட கொலை அல்ல. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, எந்த சட்டப்பிரிவின் கீழ் சேர்ப்பது என்பதை புலனாய்வு அதிகாரி தீர்மானிப்பர்.
கள்ளக்குறிச்சியில் இறந்து போனவர்களில் 32 பேர் தலித்துக்கள்; 24 தலித் அல்லாதவர்களும் உள்ளனர். தலித்துக்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு பொருந்தும்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு நடத்த வருவது எங்களுக்குத் தெரியாது. 'ஒரு பிரச்னையை தேசிய ஆணையம் விசாரிக்கத் தொடங்கினால், நாங்கள் விலகிவிட வேண்டும்; நாங்கள் உத்தரவை வெளியிட்டால்கூட தேசிய ஆணைய உத்தரவு தான் செல்லுபடியாகும்' என, விதி சொல்கிறது.
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களில், 90 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் என செய்தி வெளியானதால், நாங்கள் ஆய்வு செய்தோம்; அறிக்கை வெளியிட்டோம்.
புனித பாண்டியன்,தமிழக தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர்
- -- நமது நிருபர் -.