45 நாளில் 1 கோடி உறுப்பினர் பா.ஜ.,வில் சேர்க்க இலக்கு
45 நாளில் 1 கோடி உறுப்பினர் பா.ஜ.,வில் சேர்க்க இலக்கு
ADDED : செப் 03, 2024 01:41 AM

சென்னை: ''கட்சியினர் வீடு வீடாக சென்று, இன்று முதல், 45 நாட்களுக்குள், 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
பா.ஜ.,வில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் சேர்க்கை நடக்கும். அப்போது, ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள், தங்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ள வேண்டும்; புதியவரும் சேருவர்.
அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலாயத்தில், உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கியது.
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா முதல் உறுப்பினராக தன்னை பதிவு செய்தார். பின், கட்சியின் மூத்த நிர்வாகி எச்.வி.ஹண்டே உள்ளிட்டோர் உறுப்பினராக பதிவு செய்தனர்.
இதேபோல் மாவட்டங்களிலும் பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு முகாம் துவங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ராஜா பேசியதாவது:
உறுப்பினராக சேர மொபைல் போனில் இருந்து, 88000 02024 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க வேண்டும். அதில் உறுப்பினர் எண், 'லிங்க்' வரும். அதை கிளிக்' செய்து விபரம், புகைப்படம் பதிவேற்றினால், புகைப்படத்துடன் உறுப்பினர் கார்டு கிடைக்கும்.
தமிழக பா.ஜ.,வில், 1 கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும். உலகின் முதல் பெரிய கட்சியாக பா.ஜ., திகழ்கிறது. தமிழகத்தில் இன்று முதல் துவங்கி, 45 நாட்கள் அக்., 15க்குள், 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.