'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன், தம்பி யாருமில்லை'
'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன், தம்பி யாருமில்லை'
UPDATED : ஆக 14, 2024 06:59 AM
ADDED : ஆக 13, 2024 08:49 PM

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தலைமையின் கீழ், கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநில தலைவருக்கே முதல்வர் பதவி கொடுக்கும் நடைமுறை இருந்தது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மாநில தலைவராக இருக்கும் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதல்வர் பதவியில் அமரும் ஆசையில் இருந்தார்.
பலன் இல்லை
ஆனால் மூத்த தலைவரான சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. அவருக்கு பதவி கிடைக்க விடாமல் தடுக்க சிவகுமார் எவ்வளவோ போராடினார்.
ஆனால், அவரது போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைத்து, முதல்வர் பதவி கேட்கலாம் என்று சிவகுமார் நினைத்திருந்தார். ஆனால் அதுவும் நடக்காமல் போய்விட்டது.
தவறு இல்லை
சமீபத்தில் மைசூரில் நடந்த, 'மூடா' முறைகேடு தொடர்பாக சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதுடன், பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரையும் நடத்தின.
சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை சிவகுமார் தான் கொடுத்தார் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின. இது சிவகுமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதன்பின், முதல்வர் மீது திடீரென பாசமழை பொழிய ஆரம்பித்துள்ளார். 'மூடா முறைகேட்டில் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை. அவர் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்' என்று கூறினார்.
'சித்தராமையா தான், எங்கள் தலைவர். அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு ஆதரவாக யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் கண்டிப்பாக இருப்பேன். அவரை பாறை போல நின்று பாதுகாப்பேன்' என்றும் கூறி உள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகள், தன் மீது கூறும் குற்றச்சாட்டுகளை துடைக்க சிவகுமார் நினைக்கிறார்.
மோதல் போக்கு
முதல்வர் மீது பாசமழை பொழிவதன் பின்னணியில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சித்தராமையாவுக்கு பின் முதல்வர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி உள்ளது.
பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிகோளி உட்பட ஏராளமான தலைவர்கள் முதல்வர் பதவிக்கு வரிசை கட்டி நிற்கின்றனர். இது சிவகுமாருக்கு பீதியை கிளப்பி உள்ளது.
முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவோரில் பெரும்பாலானோர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்கள்.
ஒருவேளை சித்தராமையா கூறினால், அவரது ஆதரவாளர்களுக்கு கூட முதல்வர் பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் அவருடன் மோதல் போக்கை கைவிட்டு விட்டு, 'ஐஸ்' வைத்து முதல்வர் பதவி வாங்கலாம் என்ற கணக்கிலும் சிவகுமார் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-- நமது நிருபர் - -