ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்; 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பலன்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்; 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பலன்
UPDATED : ஆக 25, 2024 04:11 AM
ADDED : ஆக 25, 2024 01:50 AM

என்.பி.எஸ்., எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பா.ஜ., அல்லாத மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை ஏற்று, என்.பி.எஸ்., எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது கேபினட் செயலராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையிலான குழு, 100 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. ரிசர்வ் வங்கி, உலக வங்கி உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, யு.பி.எஸ்., திட்டத்தை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, 23 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் பயன் பெறுவர்.
மேலும் இந்த திட்டத்தை மாநில அரசுகளும் செயல்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில், 90 லட்சம் பேர் பலன் பெறுவர். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, மத்திய அரசுக்கு அரியர்ஸ் எனப்படும் நிலுவைத் தொகையாக மட்டும், 800 கோடி ரூபாய் செலவாகும். திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, முதல் ஆண்டில் மட்டும், 6,250 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இந்த திட்டம், 2025 ஏப்., 1 முதல் அறிமுகம் செய்யப்படும். மத்திய அரசு ஊழியர்கள், என்.பி.எஸ்., அல்லது யு.பி.எஸ்., திட்டத்தில் எதை வேண்டுமானாலும் தங்களுடைய சுய விருப்பதில் தேர்வு செய்து கொள்ளலாம்.
கடந்த, 2004 முதல் அமலில் இருந்து வரும், என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் இருந்து, ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் புதிய திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கேற்ப ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகை ஈடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, மஹாராஷ்டிராவுக்கும் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, பா.ஜ., ஆளாத பல மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -