ஒருங்கிணைந்த கட்டடத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்! கட்சியினர், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஒருங்கிணைந்த கட்டடத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்! கட்சியினர், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 16, 2024 05:13 AM

'ஒருங்கிணைந்த வளாகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து, பாதுகாக்க வேண்டும்' என, பொதுமக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு, சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பின் கீழ், அப்பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது.
பெற்றோர் சிலர் கூறியதாவது:
திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,200 பேர் படிக்கின்றனர். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர்.
மாநகரின் ஆரம்பக்கால பள்ளிகளில், நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முக்கிய பங்குண்டு.
தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் நகரில், குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் இருக்க, இக்கல்வி நிறுவனம் பேருதவி புரிந்தது.
கடந்த மூன்றாண்டாக, பள்ளியின் பழைய உள் கலை அரங்கில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன.
அரசு கட்டடத்தை பிற தேவைகளுக்கு பயன்படுத்தும் போது, அதன் உண்மையான தேவை பாதிக்கப்படும். பள்ளி வளாகத்தில் பொது நூலகமும் செயல்பட்டு வருகிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சீல் வைக்கப்பட்ட அறையில், 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது; சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றுகின்றனர்.
இது, பள்ளி வளாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அங்கு பணிபுரியும் போலீசாரும் மன உளைச்சலுக்கு ஆளாவதை உணர முடிகிறது.
பாம்பு, பல்லி, எலி உள்ளிட்டவற்றின் நடமாட்டம் அதிகமிருப்பதால், பணிபுரியும் காவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது.
எனவே, இங்கு வைக்கப்பட்டுள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடங்களில் வைத்து பராமரிக்கலாம்; அதற்கேற்ப அங்கு ஏற்பாடுகளை செய்யலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பொள்ளாச்சி, மே 16--
ஆனைமலை தாலுகா, தளவாய்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 322 துணை சுகாதார நிலையங்களும், 53 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. தளவாய்பாளையம், வீரல்பட்டி, தொண்டாமுத்தூர், பழையூர் ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், கஞ்சம்பட்டி மற்றும் சமத்தூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், சில கிராமங்களுக்கு போதிய பொதுப்போக்குவரத்து வசதி இல்லை. அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, கரட்டுப்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வீரல்பட்டி, புளியம்பட்டி, பொன்னாண்டக்கவுண்டனூர், தொண்டாமுத்தூர், கரட்டுப்பாளையம், தளவாய்பாளையம், நாச்சிபாளையம் கிராமங்களில், 8,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து, மருத்துவத் தேவைகளுக்காக கஞ்சம்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சமத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
செல்லப்பம்பாளையத்தில் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளது. ஆனால், அது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. தேனீ கடித்த விவசாயிகள் அங்கு சிகிச்சைக்காக சென்றபோது, கஞ்சம்பட்டி சென்றிருக்கலாமே எனக் கேட்டு அலைக்கழித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
எனவே, கரட்டுப்பாளையம் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்தால், இப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும்.
இதை ஒரு தனிப்பட்ட கிராமத்துக்கான திட்டமாக கணக்கில் கொள்ளாமல், மூன்று ஊராட்சிகளுக்கான திட்டமாகக் கருதி, துணை சுகாதார நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
தொண்டாமுத்தூர் அல்லது கரட்டுப்பாளையத்தில் அமைக்கலாம். தொண்டாமுத்தூரை விட, கரட்டுப்பாளையம் கிராமத்தை மற்ற இரு ஊராட்சி மக்கள் எளிதில் அணுக முடியும். எனவே, இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
செவிலியர் ஒருவர் இங்கேயே தங்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டால், விவசாயிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்
- நமது நிருபர் -.