முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் தராதது ஏன்? : கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் தராதது ஏன்? : கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
ADDED : மார் 08, 2025 12:04 AM

'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை, கிடப்பில் போட்டு வைத்தது ஏன்' என, கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016 - -2021 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், ஆவின் நிறுவனத்தில் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதமாக நடைபெறுகிறது என புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை போலீசார் சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி, ரவீந்திரன் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால், வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதி கேட்டு, கோப்புகளை தமிழக கவர்னரிடம் சமர்ப்பித்தோம்.
அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்' என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதிகள், இடைப்பட்ட காலத்தில், மாநில அரசு மீண்டும் தமிழக கவர்னரிடம் இது சம்பந்தமாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் வழங்கினர்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கடந்த விசாரணையின் போது கவர்னரை அணுக சொல்லியிருந்தோமே... செய்தீர்களா' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
'இது தொடர்பாக மூன்று முறை கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளோம். உச்ச நீதிமன்றம்உத்தரவிட்ட பின், இரண்டு முறை கடிதம் எழுதி உள்ளோம். ஆனாலும், கவர்னர் எந்த ஒரு ஒப்புதலையும் அளிக்கவில்லை' என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது; நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம்.
ஆனால், இது தொடர்பான கோப்புகளுக்கு, கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்' என்று கேள்வி எழுப்பினர். உடன், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'இதேபோல மூன்றுக்கும் அதிகமான கோப்புகளை, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்' என்றனர்.
உடன் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்று தமிழக கவர்னரின் முதன்மை செயலர் எழுத்துப்பூர்வமான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இறுதியாக ராஜேந்திர பாலாஜி தரப்பிடம், 'சி.பி.ஐ., விசாரணையோ, தமிழக போலீஸ் விசாரணையோ, எதுவாக இருந்தாலும் நீங்கள் விசாரணைக்கு உட்பட போகிறீர்கள்.
பிறகு ஏன், சி.பி.ஐ., விசாரணையை எதிர்க்கிறீர்கள்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'இந்த விவகாரத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று உள்ளது. தற்போது, சி.பி.ஐ., விசாரணை என்றால், மீண்டும் முதலில் இருந்து அனைத்தும் துவங்கும்; அதனால் தான் எதிர்க்கிறோம்' என, ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். அதை, நீதிபதிகள் பதிவு செய்தனர்
-- புதுடில்லி சிறப்பு நிருபர் -.