தமிழக இளைஞர் காங்கிரசில் போலி உறுப்பினர்கள் நீக்கும் பணி துவக்கம்
தமிழக இளைஞர் காங்கிரசில் போலி உறுப்பினர்கள் நீக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 07, 2025 06:05 AM

தமிழக இளைஞர் காங்கிரசில் புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி முடிந்த நிலையில், போலியாக சேர்ந்தவர்களை கண்டறிந்து நீக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகம் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, ஐ.ஒய்.சி எனும் செயலி வழியே, கடந்த ஜன., 18ல் துவங்கி பிப்., 27ல் முடிவடைந்தது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பணம் செலுத்தி, உறுப்பினராக சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டளிக்க முடியும். எனவே, மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்பியவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை உறுப்பினராக சேர்த்தனர். அவர்களுக்கு தாங்களே பணம் கட்டினர். சில மாவட்டங்களில், புடவை, பேன்ட் சட்டை, குடம், வாளி, வெள்ளி நாணயங்கள் போன்றவை கொடுத்து உறுப்பினர்களாக சேர்த்தனர்.
சில மாவட்டங்களில், போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, டில்லி மேலிடத்திற்கு, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தகவல் அனுப்பினர். அதைத் தொடர்ந்து, போலி உறுப்பினர்களை நீக்கிய பின், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் டில்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
அடையாள அட்டை
அதன்பேரில், புதிய உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மொபைல்போன் வாயிலாக, உண்மையான உறுப்பினர்களை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. தமிழகம் முழுதும் புதிதாக 3.81 லட்சம் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், 17,000 பேர், தலா 50 ரூபாய் கட்டணம் கட்டவில்லை. அவர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -