நாடு முழுதும் ஒரே ஆண்டில் பறிமுதலான தங்கம் 1,319 கிலோ!: லாபம் கொழிக்கும் தொழிலாக மாறும் அபாயம்
நாடு முழுதும் ஒரே ஆண்டில் பறிமுதலான தங்கம் 1,319 கிலோ!: லாபம் கொழிக்கும் தொழிலாக மாறும் அபாயம்
ADDED : மார் 16, 2025 12:25 AM

டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பு, கடந்த 2023 - 2024ம் நிதியாண்டில் மட்டும், 1,319 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. தங்கம் கடத்தப்படுவது, நம் நாட்டில் மிகப்பெரிய லாபம் கொழிக்கும் தொழிலாக மாறி வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்ததாக, உலகிலேயே அதிகளவு தங்கத்தைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2023ல், 744 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024ல், 712.1 டன்னாக இருந்தது.
பல காரணங்களால் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மற்ற சொத்துக்களைவிட தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, தங்க ஆபரணங்களுக்கு அதிக தேவை இருப்பது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
பறிமுதல்
மத்திய அரசு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக, கடந்தாண்டு ஜூலையில் குறைத்தது. இதையடுத்து, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால், அதன் தேவையும் உயர்ந்துள்ளது.
ஒரு பக்கம் தங்கம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது. கடந்த 2023 - 2024ம் நிதியாண்டில் மட்டும், டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பு, 1,319 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.
இவை, வங்கதேசம், மியான்மரில் இருந்து நம் நாட்டின் கிழக்கு எல்லை வழியாக கடத்தி வரப்பட்டவை.
டி.ஆர்.ஐ., அறிக்கையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால், அங்கிருந்து கடத்தி வரப்படுவது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டில், ஏப்., - ஜூன் மாதங்களில் மட்டும் பல்வேறு விமான நிலையங்களில், 544 கோடி ரூபாய் மதிப்புள்ள 847 கிலோ கடத்தல் தங்கத்தை, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கக் கடத்தலை தடுப்பதற்கு, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் பல வழிகளை கையாளுகின்றனர்.
விமான பயணியரின் விபரங்கள் சரிபார்ப்பது, அவர்களுடைய பெட்டிகளை ஆய்வு செய்வது, மோப்ப நாயைப் பயன்படுத்துவது, ரகசிய தகவல்களை இடைமறிப்பது என, பல வகைகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
இதுபோன்ற ஒரு முயற்சியிலேயே, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், பெங்களூரில் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து வந்த அவர், 14.2 கிலோ தங்கத்தை தன் உடலில் மறைத்து எடுத்து வந்தார்.
45 சதவீதம்
ஒரு அறிக்கையின்படி, நம் நாட்டுக்குள் கடத்தி வரப்படும் தங்கத்தில், 40 - 45 சதவீதம் மேற்கு வங்கம், மணிப்பூர், மிஜோரம் மாநிலங்கள் வழியாகவே வருகிறது.
இவை வங்கதேசம், மியான்மர், சீனாவில் இருந்து வருகின்றன.
இதற்கு அடுத்தபடியாக, 30 - 35 சதவீத கடத்தல் தங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா வழியாக வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கிழக்காசிய நாடுகளில் இருந்து இவை கடத்தி வரப்படுகின்றன.
மீதமுள்ள 20 - 30 சதவீதம் மற்ற மாநிலங்களுக்கு வருகின்றன. இவை பெரும்பாலும், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வருகின்றன.
- நமது சிறப்பு நிருபர் -