தி.மு.க., தேர்தல் அறிக்கை செயலியில் ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள்
தி.மு.க., தேர்தல் அறிக்கை செயலியில் ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள்
ADDED : ஜன 05, 2026 05:35 AM

தி.மு.க., தேர்தல் அறிக்கை செயலியில், ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள் பதிவாகி உள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை, மக்களுடன் இணைந்து உருவாக்கும் நோக்கில், மொபைல் போன் செயலியை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களின் நேரடி கருத்துகளை பெற, இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, மக்கள் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகளை பதிவு செய்ய முடியும்.செயலியில் பெறும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, தி.மு.க., அமைத்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆய்வு செய்து, பொருத்தமான அம்சங்களை வாக்குறுதிகளாக சேர்க்க உள்ளனர்.
இச்செயலியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த ஒரே நாளில், 14,318 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பதிவாகிஉள்ளன.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2026ல் அமைய இருக்கும் தி.மு.க., அரசு, பெருவாரியான மக்களின் பங்களிப்புடன் அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். எனவே, மக்களின் கருத்துகள், பரிந்துரைகளை பெறும் வகையில், மொபைல் போன் எண், வலைதள விபரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.
இந்நிலையில், ஒரே நாளில், மொபைல் போன் வாயிலாக 1,188; 'வாட்ஸாப்' வழியாக 7,527; மின்னஞ்சல் வாயிலாக 251; சமூக வலைதளம் மற்றும் இணையதளம் வழியாக 2,015; கியூ.ஆர்., கோடு வழியாக 692; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக 2,645 என, மொத்தம் 14,318 கோரிக்கைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

