ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்
ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்
ADDED : செப் 20, 2024 01:18 AM

சென்னை: தமிழகத்தில், 25 புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை, 85,512 கோடி ரூபாயில் துவங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில், 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலைகள், சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்துக்கு பெரிதும் உதவி வருகின்றன. இதன் வாயிலாக, மாநிலத்தின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.
இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புறவழிச்சாலை, புதிய தேசிய நெடுஞ்சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு, 2,170 கி.மீ.,க்கு 25 புதிய சாலை பணிகளை அடுத்தாண்டு துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இப்பணிக்கு, 85,515 கோடி ரூபாய் தேவைப்படும் என, தோராயமாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு பொறுப்பேற்ற பின், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சாலை பணிகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்க முடியவில்லை. அடுத்த ஐந்து மாதங்களில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். அதை மனதில் வைத்து, 25 புதிய சாலைகளுக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி நடக்கிறது.
இப்பணிகளை அடுத்தாண்டு திட்டமிட்டபடி துவங்க, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.