கோவையில் 25,000 பேருக்கு கடி! வெறித்தனமாக திரியும் தெருநாய்கள்
கோவையில் 25,000 பேருக்கு கடி! வெறித்தனமாக திரியும் தெருநாய்கள்
UPDATED : நவ 05, 2024 05:43 AM
ADDED : நவ 05, 2024 05:41 AM

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த, 23 வயது இளம்பெண்ணை தெருநாய் கடித்ததால், 'ரேபிஸ்' நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, சில நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கிறார். இதேபோல், கோவை நகர்ப்பகுதியில் மட்டும் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, இதுநாள் வரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கோவையில் நடந்தது தெருநாய்க்கடியால் ஏற்பட்ட இழப்பு. திருப்பூரில் நடந்தது வேறு விதம். வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஒரு தம்பதி, தெருநாய் குறுக்கே பாய்ந்ததால் தடுமாறி கீழே விழுந்தனர். அவ்வழியாக வந்த லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கின்றனர்.
முந்தைய காலங்களில் தெருநாய்கள் கொல்லப்பட்டன. 'ப்ளு கிராஸ்' மற்றும் விலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பால், கொல்வது கைவிடப்பட்டது. அதற்கு மாறாக, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்படுகிறது. இதற்கான செலவினத்தை உள்ளாட்சி அமைப்புகள் செய்கின்றன.
ஆனாலும், போதிய நிதி இல்லாமல் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதில்லை. பொருளாதார வசதியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெருந்தொகை செலவிட்டு கருத்தடை செய்கின்றனர். ஆனாலும் இனப்பெருக்கம் அதிகரித்து விடுகிறது.
லட்சம் நாய்கள்
சமீபத்தில், கோவை மாநகராட்சி எடுத்த கணக்கெடுப்பில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இதுவரை, 25 ஆயிரம் நாய்களுக்கே கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் கருத்தடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை செய்ய 1,650 ரூபாய், மாநகராட்சியால் செலவிடப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், கோவையில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய மட்டும் 18 கோடியே, 97 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி நிர்வாகத்தால் செலவிடப்படும்.
இச்செலவினம் தேவையா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மனித உயிர் முக்கியமா; விலங்கு உயிர் முக்கியமா என்கிற சிந்தனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கோவை மாநகராட்சி மட்டுமே இவ்ளோ தொகை செலவிடுகிறதென்றால் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கிட்டால் தலைசுற்றல் வந்து விடும் போலிருக்கு.
நாய்க்கடியால் பாதிப்பு
இச்சூழலில், தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருவோர் பட்டியலை பார்த்தால் மிரள வைக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் (ஜன., - செப்.,) கோவை அரசு மருத்துவமனையில் மட்டும், 15 ஆயிரத்து, 124 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றிருக்கின்றனர். சிகிச்சை பலனின்றி, 4 பேர், இதன் பின் இருவர் என, மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில், 9,881 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்படி, ஒன்பது மாதங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும், 25 ஆயிரத்து, 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது இக்கணக்கில் சேராது.
'ரேபிஸ்' பாதிப்பு
தெருநாய் கூட்டத்திலும் வெறி நாய், சொரி நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களும் காணப்படுகின்றன. இவை கடித்தால், மனித உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. வெறி நாய், சொரி நாய் கடிக்கும்போது, 'ரேபிஸ்' பாதிப்பு ஏற்படுகிறது. 'ரேபிஸ்' நோய் பாதித்தால், உயிரிழப்பு நிச்சயம் என்ற சூழலே தற்போது வரை உள்ளது.
ஒரு குப்பியில் உள்ள 'ரேபிஸ்' தடுப்பூசி மருந்தை, 5 பேருக்கு செலுத்தலாம். ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு, தனியார் மருத்துவமனையில், 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஐந்து முறை தடுப்பூசி செலுத்த வேண்டுமென டாக்டர்கள் கூறுவதால், தெருநாய்க்கடிக்கு உள்ளானவர், தடுப்பூசிக்கு மட்டும், 2,500 ரூபாய் செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. கோவையில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் செப்., வரை, 25 ஆயிரம் பேருக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கு ரூ.2,500 வீதம் கணக்கிட்டால், 6 கோடியே, 25 லட்சம் ரூபாய் வரை தடுப்பூசி செலுத்திய வகையில் தமிழக அரசுக்கு செலவாகியிருக்கிறது.
தடுப்பூசி அவசியம்
கால்நடை டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், “நாய்க்கடிக்கும், பருவ மாற்றத்துக்கும் சம்பந்தமில்லை. தெரு நாய் கடித்தால், 'ரேபிஸ்' தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். முதல் நாள், மூன்றாவது நாள், 14வது நாள், 28வது நாள், 90வது நாள் என, ஒவ்வொருவரும் ஐந்து முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 90வது நாள் செலுத்திக் கொண்டால், ஓராண்டுக்கு பாதுகாப்பானது,'' என்றார்.
சமூக ஆர்வலர் சந்திரன் கூறுகையில், ''தெருநாய்களின் உயிரை பாதுகாப்பதை விட பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம். இவ்விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் அக்கறை செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடலாம். நாய்களுக்கு என வனம் அமைத்து பராமரிக்கலாம். நாய் கடித்தால் செலவாகும் தொகையை, அதற்கு பயன்படுத்தினால் நாய்களும் பாதுகாப்பாக இருக்கும், மக்களும் நிம்மதி அடைவார்கள். நாய்களை கருணைக் கொலை செய்ய மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். நாய் தொல்லை காரணமாக சிலர் கொன்று விடுகின்றனர். பின், பிரச்னைகளில் சிக்கி சிரமப்படுகின்றனர். 'ப்ளு கிராஸ்' அமைப்பு மற்றும் விலங்குகள் ஆர்வலர்கள் தமிழக அரசுடன் இணைந்து தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
கால்நடைகளும் தப்புவதில்லை!
உடுமலை வட்டார பகுதிகளில், 20 முதல், 30 தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருவதோடு, பொதுமக்களை மட்டுமன்றி, ஆடு, மாடு, கோழிகளையும் கடித்து குதறி வருகின்றன. இரவு நேரங்களில், தோட்டத்துசாளைகளுக்குள் புகுந்து, ஒரே சமயத்தில், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றுள்ளன. இதேபோல், மாடுகள், கன்றுக்குட்டிகள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்குள் புகுந்து, நுாற்றுக்கணக்கான கோழிகளையும் கடித்து கொன்றுள்ளன. கடந்த, 3 மாதத்தில் மட்டும், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் நாய்க்கடிக்கு பலியாகியுள்ளன. கோழிப்பண்ணைகளில் வளர்ந்த, நுாற்றுக்கணக்கான கோழிகளும் இரையாகியுள்ளன.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ''50க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக இருப்பதோடு, இரவு நேரங்களில் வன விலங்குகளை போல் வேட்டையாடுகின்றன. இரு ஆண்டுகளாக, பெரும் பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்,'' என்றார்.
மனித உயிர்களை காப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை செலவிட முனைப்பு காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைபோல், தெருநாய்களை பிடித்து ஏன் கருணை கொலை செய்யக்கூடாது, என பொது நல அமைப்பினர் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். மனித உயிர் முக்கியமா; விலங்கு உயிர் முக்கியமா என்பதே அவர்கள் வைக்கும் வாதமாக இருக்கிறது. அதேநேரம், மனித உயிருக்கு ஆபத்து என்றாலும் கூட, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாமே தவிர, கொல்லக்கூடாது என விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தெருநாய் பிரச்னை தானே என அலட்சியமாக கடந்து செல்லாமல், 'ரேபிஸ்' நோய் பாதிப்புக்குள்ளாகி, மனித உயிர்கள் பலியாகி வரும் சூழல் அதிகரிக்கத் துவங்கியிருப்பதால், இவ்விஷயத்தில், மத்திய - மாநில அரசுகள் கொள்கை ரீதியாக முடிவெடுத்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.