ஒரே தேர்தல் மசோதா விவகாரத்தில் திருப்பம் !: லோக்சபா நிகழ்ச்சி நிரலில் திடீர் மாற்றம்
ஒரே தேர்தல் மசோதா விவகாரத்தில் திருப்பம் !: லோக்சபா நிகழ்ச்சி நிரலில் திடீர் மாற்றம்
ADDED : டிச 15, 2024 11:53 PM

புதுடில்லி: 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
பல கட்டங்கள்
அந்தக் குழுவினர் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம் என்றும், துவக்கத்தில் அதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது. மேலும், இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு, கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா - 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா - 2024 ஆகிய இரண்டையும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் இன்று தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
லோக்சபாவுக்கான இன்றைய நிகழ்ச்சி நிரலில், அது சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, லோக்சபா நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இந்த மசோதாக்கள் தாக்கல் நீக்கப்பட்டுள்ளன.
இதனால், இன்றைக்கு இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது என கூறப்படுகிறது.
துணை பட்ஜெட் மானியக் கோரிக்கை உள்ளிட்டவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா தாக்கலை ஒத்திவைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், சபாநாயகர் ஒப்புதலுடன், ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 நாள் விவாதம்
குளிர்கால கூட்டத் தொடர், 20ம் தேதி வரை நடக்க உள்ளது. அதனால், இந்த வாரத்துக்குள் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்தன. அதுபோல ராஜ்யசபாவில் இரண்டு நாள் விவாதம் இன்று துவங்க உள்ளது.
தெளிவு இல்லையே!
ஒரு மாநில அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் கவிழ்ந்தால் அல்லது பெரும்பான்மையை இழந்தால், மீதமுள்ள நான்கரை ஆண்டுகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் தான் நிர்வாகம் நடத்த வேண்டுமா? இந்த விஷயத்தில் தெளிவு தேவை.
- திக்விஜய் சிங்
மூத்த தலைவர், காங்கிரஸ்
ஆதரவு தேவை!
ஒரே நாடு ; ஒரே தேர்தல் திட்டத்தால் மக்கள் வரிப்பணம் தேவையில்லாமல் செலவிடப்படுவது குறையும். அரசின் செலவு குறையும். இந்த நிதியை, மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடலாம். எனவே, இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
- மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்