தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விதவிதமான போதை பொருட்கள் புழக்கம்; அ.தி.மு.க., புகார்
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விதவிதமான போதை பொருட்கள் புழக்கம்; அ.தி.மு.க., புகார்
ADDED : ஆக 19, 2025 04:48 AM

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், விதவிதமான போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு வந்து விட்டன' என அ.தி.மு.க., வைத்த குற்றச்சாட்டால், ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் நேற்று தேர்தல் கமிஷன் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, இந்திய துறைமுகங்கள் மசோதாவை, கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தாக்கல் செய்தார்.
அதன் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், விதவிதமான போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
தமிழக துறைமுகங்கள் வழியாக போதைப் பொருட்கள் அதிகமாக வருகின்றன. சென்னை, துாத்துக்குடி துறைமுகங்கள் வாயிலாக வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த, தமிழக அரசு தவறிவிட்டது.
தமிழக துறைமுகங்களை தி.மு.க.,வினர் தவறான வழிகளுக்கு பயன்படுத்த துவங்கி விட்டனர். சில சமயங்களில் போதைப் பொருட்கள் பெருமளவில் பிடிபடும்போது, அதில் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகி வருகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த விவகாரம் குறித்து பலமுறை பேசியும் நடவடிக்கை இல்லை. போதைப் பொருட்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மாணவர்களின் வாழ்க்கை பாழாகிறது. எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்ததை கேள்விப்பட்டு, வெளிநடப்பு செய்த தி.மு.க., - -எம்.பி.,க்கள், சபைக்குள் வந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 'மசோதாவுக்கு சம்பந்தமில்லாமல் தம்பிதுரை பேசுகிறார். சபை விதிகளுக்கு எதிராக பேசும் அவரை, பேச அனுமதிக்கக் கூடாது' என்றனர்.
அதற்கு தம்பிதுரை, ''பல ஆண்டுகளாக இந்த சபையை வழி நடத்திய எனக்கு விதிகள் தெரியும். எனக்கு பாடம் நடத்த வேண்டாம். கேள்வி கேட்க, தி.மு.க.,வுக்கு உரிமை கிடையாது,'' என்றார்.
இதனால், கடும் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் முடிவில், இந்திய துறைமுகங்கள் மசோதா நிறைவேறியது.
-- நமது டில்லி நிருபர் - '