அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி பேச்சு முறிவு: பா.ம.க.,வே காரணம் என வெளியாகும் தகவல்
அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி பேச்சு முறிவு: பா.ம.க.,வே காரணம் என வெளியாகும் தகவல்
ADDED : ஏப் 04, 2025 06:29 AM

'அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, நடிகர் விஜய் தரப்பில் சம்மதம் தெரிவித்து, பேச்சு துவக்கப்பட்ட நிலையில், பா.ம.க.,வையும் சேர்ப்போம்' என பழனிசாமி தரப்பில் வலியுறுத்தியதால், கூட்டணி பேச்சு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார்.
ஆலோசனை
அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்து பேசினார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க பழனிசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரம் பா.ஜ., இல்லாமல், த.வெ.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் முஸ்லிம் சமுதாய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடித்து விடலாம் என பழனிசாமி கருதுகிறார். அதற்கான ரகசிய பேச்சு நடந்து வருகிறது. சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசினார். அப்போது, 'த.வெ.க., வுக்கு 20 சதவீதம் ஓட்டுகள் உள்ள நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி அமைக்கலாம்' என ஆலோசனை கூறியுள்ளார்.
த.மா.கா.,வைச் சேர்ந்த இளம் தலைவர் ஒருவரின் முயற்சியால், விஜய் தரப்பிடம் பேச்சு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில், 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என, த.வெ.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அ.தி.மு.க., தரப்பு சம்மதம் தெரிவித்த நிலையில், கூட்டணியில் பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,வும் இடம்பெறும் என, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை, விஜய் தரப்பினர் ஏற்கவில்லை. பா.ம.க., தற்போது தே.ஜ., கூட்டணியில் உள்ளது. அக்கட்சியைச் சேர்க்க வேண்டாம் என்றனர். பா.ம.க., இருந்தால் தான், வட மாவட்டங்களில் அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்ய முடியும் என பழனிசாமி தெரிவித்தார்.
ரகசிய பேச்சு
இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விஜய் தரப்பு கூட்டணி பேச்சை மேற்கொண்டு தொடராமல் நிறுத்தியது. கூட்டணி பேச்சு நடந்ததன் காரணமாக, த.வெ.க., பொதுக்குழுவில் அ.தி.மு.க.,வை மட்டும் அக்கட்சியினர் விமர்சிக்கவில்லை. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை மட்டும் நேரடியாகவே விஜய் விமர்சித்து பேசினார். பா.ஜ., கூட்டணியை விரும்பாத நிலையில், டில்லி பா.ஜ., மேலிடம் அளித்த நெருக்கடி காரணமாக, அமித் ஷாவை பழனி சாமி சந்தித்துள்ளார்.
கூட்டணி பேச்சை தற்காலிகமாக நிறுத்தியிருந்த த.வெ.க., தரப்பினர், மீண்டும் அ.தி.மு.க.,வுடன் ரகசியமாக பேசத் துவங்கி உள்ளனர். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமையுமா அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., இடம் பெறுமா என்பது குறித்த குழப்பம், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
'எதுவாக இருந்தாலும் சட்டென முடிவெடுத்து, தேர்தல் களத்துக்கு வாங்க' என கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வலியுறுத்த துவங்கி உள்ளனர். அதனால், இன்னும் சில வாரங்களில், கூட்டணி குறித்த அ.தி.மு.க.,வின் நிலை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

