கூடுதல் இடங்கள் ஒதுக்கும்படி கூட்டணி கட்சிகள் பிடிவாதம்! பா.ஜ.,வுக்கு தலைவலி
கூடுதல் இடங்கள் ஒதுக்கும்படி கூட்டணி கட்சிகள் பிடிவாதம்! பா.ஜ.,வுக்கு தலைவலி
UPDATED : ஜன 01, 2025 04:19 AM
ADDED : ஜன 01, 2025 01:04 AM

மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கும் முக்கியமான மூன்று கட்சிகளும், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கும்படி நெருக்கடி கொடுப்பதால், தொகுதிப் பங்கீடு பிரச்னை பா.ஜ., தலைமைக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜன சக்தி, ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இவற்றில் ஐக்கிய ஜனதா தளமும், லோக்ஜன சக்தி ஆகிய கட்சிகள் பீஹாரிலும், டில்லியை ஒட்டி அமைந்துள்ள உ.பி., பகுதிகளில் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியும் செல்வாக்கு மிக்கவை.
இந்நிலையில், டில்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களுமே ஒருவரையொருவர் தாக்கி பேசி வருவதால், கூட்டணிக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
மும்முனை போட்டி
இது, பா.ஜ.,வுக்கு கூடுதல் தெம்பை தந்துள்ளது. இதனால், ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜ., முனைப்பு காட்டுகிறது. இதற்காக வீடு வீடாகச் சென்று, அக்கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தை துவக்கினாலும், தொகுதிப் பங்கீடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் பா.ஜ.,வினர் மத்தியில் தீவிரமாக பேசப்படுகிறது.
முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், ஏற்கனவே டில்லியில் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுவது வழக்கம். இங்கு பல பகுதிகளில், கணிசமான எண்ணிக்கையில் பூர்வாஞ்சலிஸ் என்றழைக்கப்படும், பீஹார் மற்றும் உ.பி.,யைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
நெருக்கடி
பிழைப்பு தேடி பல ஆண்டுகளுக்கு முன்பே டில்லிக்கு வந்து, இங்கு குடியேறி விட்டனர். இவர்களது எண்ணிக்கை சில லட்சங்களை தொடும். சில குறிப்பிட்ட தொகுதிகளில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்திகளாகவும் இவர்கள் உள்ளனர். இதனால், இந்த தொகுதிகளை குறிவைத்து, ஐக்கிய ஜனதா தளம் எப்போதுமே போட்டியிடுவது வழக்கம். கடந்த தேர்தலில் இதே பா.ஜ., கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில்கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை.
ஆனாலும், இப்போது மத்தியில் ஆளும் கூட்டணி அரசை தாங்கிப்பிடிக்கும் முக்கிய கட்சியாக இருப்பதால், தங்களுக்கு இந்த முறை ஐந்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, ஐக்கிய ஜனதா தளம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் ஐந்து இடங்களை கேட்டு நெருக்கடி தரத் துவங்கியுள்ளது.
தலைவலி
ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரீய லோக் தளமும், டில்லியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் தங்களுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஓட்டு வங்கியை சுட்டிக்காட்டியும், விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளதை குறிப்பிட்டும், தங்களுக்கும் ஐந்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, பிடிவாதம் பிடித்து வருகிறது.
பீஹாரிலும், உ.பி.,யிலும் செல்வாக்கு உள்ள கட்சிகள் என்பதால், இவற்றை புறக்கணிக்க முடியாத தர்மசங்கடத்தில் பா.ஜ., தலைவர்கள் உள்ளனர். ஆனாலும், மத்திய அரசுக்கான ஆதரவு என்ற ஆயுதம் இருப்பதால், இந்த கூட்டணி கட்சிகள் தரும் திடீர் நெருக்கடி காரணமாக தொகுதிகளை பங்கீடு செய்வதில், பா.ஜ., தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
மொத்தம் உள்ளதே 70 இடங்கள்தான். இவற்றில் ஆளுக்கு ஐந்து தொகுதிகள் என, 15 தொகுதிகளை தாரை வார்ப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அதேநேரத்தில், கடந்த முறை தந்ததைவிட கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கியாக வேண்டும் என்ற கட்டாயம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -