காங்கிரசை கழற்றி விட கூட்டணி கட்சிகள் தயார்!: டில்லியில் தனித்து போட்டியிட ஆம் ஆத்மி முடிவு
காங்கிரசை கழற்றி விட கூட்டணி கட்சிகள் தயார்!: டில்லியில் தனித்து போட்டியிட ஆம் ஆத்மி முடிவு
ADDED : அக் 09, 2024 11:44 PM

புதுடில்லி: 'ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு அதீத நம்பிக்கையும், கூட்டணி கட்சிகளை மதிக்காமல் செயல்பட்டதும் தான் காரணம்' என, 'இண்டி' கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரசை கழற்றி விட தயாராகி வருகின்றன.
ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, 48 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ., பெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரியானாவில், பா.ஜ., ஆட்சி அமைக்கவுள்ளது.
புலம்பல்
ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவுவதால் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற தைரியத்தில், அதீத நம்பிக்கையுடன் இருந்த காங்., தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாமல் புலம்பி வருகிறது.
இந்நிலையில், 'ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்., தோல்வி அடைந்ததற்கு அதீத நம்பிக்கையும், பிடிவாத குணமும்தான் காரணம்' என, அக்கட்சியின் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
மஹாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, காங்., தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான, 'சாம்னா'வில், காங்கிரசை விமர்சித்து எழுதப்பட்டுள்ள தலையங்கம்:
ஆம் ஆத்மி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளிக்கத் தவறியது, உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியது போன்றவற்றால், ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்., தோல்வியை சந்தித்துள்ளது.
எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில்கூட, தோல்வி அடையும் திறன் அக்கட்சிக்கு மட்டுமே உள்ளது. ம.பி., - சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., ஆட்சிக்கு வராது என, பேசப்பட்டது.
உட்கட்சி பூசல்
ஆனால் காங்கிரசில் நிலவிய உட்கட்சி பூசல், அக்கட்சிக்கு சாதகமாக அமைந்தது. ஹரியானாவில் காங்., தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா இடையே முதல்வர் பதவியை பிடிப்பதில் மட்டுமே கவனம் இருந்தது.
இவர்களிடையே ஒத்துழைப்பு இல்லை. தேர்தலின்போது ஒற்றுமையாக இருந்திருந்தால், காங்கிரசுக்கு முடிவுகள் நல்ல விதமாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உத்தவ் தரப்பு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ''ஹரியானாவில், காங்., தலைவர்கள் அதீத நம்பிக்கையுடன் இருந்தனர்.
''சமாஜ்வாதி அல்லது ஆம் ஆத்மி கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தால், முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கும்.இதிலிருந்து காங்., பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தங்களை பெரிய ஆளாக அக்கட்சி நினைக்கக் கூடாது,'' என்றார்.
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோக்லே கூறுகையில், ''காங்கிரசின் அணுகுமுறை தேர்தல் தோல்விகளுக்கு வழிவகுக்கிறது'' என்றார்.
தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவியேற்க உள்ள ஒமர் அப்துல்லா கூறுகையில், ''ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து, காங்., சுயபரிசோதனை செய்ய வேண்டும்,'' என்றார்.
ஆம் ஆத்மி அதிரடி
'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர்கள், சக கூட்டணி கட்சிகளை மதிக்காமல், ஆணவத்துடன் செயல்பட்டதால்தான் தோல்வி கிடைத்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக டில்லி சட்டசபை தேர்தலில் அந்த கட்சியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
இருந்தாலும், கூட்டணி தர்மத்தை மதித்து, கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கினோம். ஆனால், ஹரியானா சட்டசபை தேர்தலில் எங்களை அவர்கள் மதிக்கவில்லை. வெற்றி மிதப்பில் இருந்தனர்.
எனவே, அடுத்தாண்டு நடக்கவுள்ள டில்லி சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து ஹரியானா மாநில காங்., தலைவர்களுடன், கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். தோல்வி குறித்து விரிவாக ஆலோசிக்கவுள்ளோம்.
- ரா-குல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,