அமித் ஷா இன்று சென்னை வருகிறார்; இ.பி.எஸ்., உடன் கூட்டணி பேச திட்டம்?
அமித் ஷா இன்று சென்னை வருகிறார்; இ.பி.எஸ்., உடன் கூட்டணி பேச திட்டம்?
UPDATED : ஏப் 10, 2025 05:26 AM
ADDED : ஏப் 10, 2025 03:45 AM

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு சென்னை வருகிறார். பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களை, நாளை சந்திக்கிறார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
டில்லியில் இருந்து இன்று இரவு, 10:20 மணியளவில், தனி விமானத்தில் சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பின், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும், அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மாலையில், மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அங்கு வர உள்ளதாக தெரிகிறது. அங்கு நடக்கும் ஆலோசனையை முடித்த பின், அமித்ஷா நேராக விமான நிலையம் செல்கிறார்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததற்கு, தி.மு.க.,வும் ஒரு காரணம் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. எனவே தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க, அக்கட்சிக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கும் முயற்சியில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - அ.ம.மு.க., - பன்னீர்செல்வம் அணி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் வருமானால், தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.
அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில், அமித்ஷா ஆர்வமாக உள்ளார். பழனிசாமியை டில்லி அழைத்து பேசியதன் தொடர்ச்சியாகவே, அமித்ஷாவின் சென்னை வருகை அமையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

