தி.மு.க., பக்கம் திரும்புகிறதா முத்தரையர் சமுதாய ஓட்டுகள்? 'சர்வே' முடிவால் ஆளுங்கட்சி உற்சாகம்
தி.மு.க., பக்கம் திரும்புகிறதா முத்தரையர் சமுதாய ஓட்டுகள்? 'சர்வே' முடிவால் ஆளுங்கட்சி உற்சாகம்
ADDED : டிச 15, 2025 06:15 AM

சென்னை : 'அ.தி.மு.க., ஆதரவு முத்தரையர் சமுதாய ஓட்டுகளை, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கைப்பற்றும்' என சர்வேயில் தெரிய வந்துள்ளதால், தி.மு.க., உற்சாகம் அடைந்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் பெரம்பலுார், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
அறுவடை
அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியதும் முத்தரையர் ஓட்டுகள் அவருக்கு ஆதரவாக இருந்தன. பல மாவட்டங்களில், அ.தி.மு.க., தொடர் வெற்றிகளை குவித்தது. எம்.ஜி.ஆருக்கு பின், ஜெயலலிதாவும், முத்தரையர் சமுதாய ஓட்டுகளை அறுவடை செய்து வந்தார்.
முத்தரையர் சமுதாய தலைவர்களை வளைக்கும் வேலைகளில் ஈடுபட்டு, அது பலனளிக்காமல், கருணாநிதி தோல்வியை சந்தித்தார். ஜெயலலிதா இருக்கும் வரை, அது எடுபடவில்லை. பழனிசாமி முதல்வரான பின், அ.தி.மு.க.,வில் முத்தரையர் செல்வாக்கு மெல்ல குறைந்தது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், 25 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீரங்கம் தொகுதியை தி.மு.க., கைப்பற்றியது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முத்தரையர் சமுதாய ஓட்டுகளை கவரும் வேலைகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கினார்; ஆலங்குடி தொகுதியில் வென்ற முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த மெய்யநாதனுக்கு, அமைச்சரவையில் இடம் வழங்கினார்.
இந்நிலையில், தி.மு.க., தலைமை எடுத்த தொடர் முயற்சிகளால், ஜெயலலிதா அறுவடை செய்த முத்தரையர் ஓட்டுகள், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு கணிசமாக கைமாறும் என, ரகசிய சர்வே வாயிலாக தெரிய வந்துள்ளது. இது, தி.மு.க., தலைமையை உற்சாகத்தில் ஆழ்த்திஉள்ளது.
அஞ்சல் தலை
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த அம்பலக்காரர், வளையர் போன்றோருக்கு உரிய ஜாதி சான்று கிடைக்காமல் இருந்தது. தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கையால், அந்த பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. பெரும்பிடுகு முத்தரையர் நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த 90 சதவீதம் பெண்கள், பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால், முத்தரையர் மத்தியில் தி.மு.க.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜன்சி வாயிலாக எடுத்த சர்வேயில், முத்தரையர் ஆதரவு, தி.மு.க.,விற்கு 50 முதல் 55 சதவீதம் உள்ளதாக தெரிந்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,விற்கு 30 முதல் 35 சதவீதம், விஜயின் த.வெ.க.,விற்கு 7 முதல் 10 சதவீதம், நா.த.க.,விற்கு 3 முதல் 3.5 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.
இதை அறிந்த பா.ஜ., தேசிய தலைமை, முத்தரையர் சமுதாய மக்களின் மீது கவனம் செலுத்தும்படி, அ.தி.மு.க., தலைமைக்கு அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

