வெளிநாடு போறீங்களா; பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் மத்திய அரசு செய்த மாற்றம் இதோ!
வெளிநாடு போறீங்களா; பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் மத்திய அரசு செய்த மாற்றம் இதோ!
ADDED : மார் 12, 2025 07:39 AM

சென்னை: பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில், மத்திய அரசு நான்கு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பிறப்பு சான்றிதழ்
கடந்த, 2023 அக்டோபர், 1க்கு பின் பிறந்தவர்களுக்கான பிறந்த தேதிக்கு, நகராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் மட்டுமே சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதற்கு முன் பிறந்தவர்கள், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளிட்ட மற்ற ஆவணங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
முகவரி
இதுவரை, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்ட முகவரி, பாஸ்போர்ட் வைத்திருப்போரின் பாதுகாப்பு கருதி இனி அச்சிடப்படாது. அதற்கு பதில், குடியுரிமை அதிகாரிகள் மட்டும், 'ஸ்கேன்' செய்து அறியும் வகையில், 'பார்கோடு' வடிவில் அச்சிடப்படும்.
வண்ண அடையாளம்
பாஸ்போர்ட்டின் வகைகளை எளிதில் அறியும் வகையில், இனி குடிமக்களுக்கு எப்போதும் போல நீல நிறத்தில் வழங்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், துாதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலான பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பெற்றோர் பெயர்
இதுவரை, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்த பெற்றோர் பெயர் இனி அச்சிடப்படாது. அதாவது, ஒற்றை பெற்றோர், பிரிந்து சென்ற பெற்றோரின் குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், இந்த முறை பின்பற்றப்பட உள்ளது.
நாட்டில் தற்போது, 422 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் உள்ளன. அவற்றை அடுத்த ஐந்தாண்டுகளில், 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அஞ்சல் துறையுடன் வெளியுறவு அமைச்சகம் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.