ADDED : ஜூலை 10, 2026 04:06 AM

சென்னை: தமிழகத்திற்கு நிரந்தர கவர்னராக, ராஜேந்திர அர்லேக்கர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக கவர்னராக இருந்த ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், கடந்த மார்ச் 12ல் தமிழக பொறுப்பு கவர்னராக பொறுப்பேற்றார்.
கடந்த, 2021 ஜூலை 13ம் தேதி ஹிமாச்சல் பிரதேச கவர்னராக பொறுப்பேற்று, கவர்னர் பதவியில் ஐந்தாண்டுகளை, வரும் 13ம் தேதி நிறைவு செய்கிறார்.
இதனால், அவர் கவர்னர் பதவியில் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 1ம் தேதி டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, கவர்னர் பதவி நீட்டிப்பு குறித்து விவாதிக்கப்பட்டுஉள்ளது.
கேரள, தமிழக கவர்னராக, ராஜேந்திர அர்லேக்கரின் செயல்பாடுகள், அமித் ஷாவுக்கு திருப்தி அளித்துள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத த.வெ.க., ஆட்சி அமைத்தது. அப்போது எழுந்த அசாதரண சூழலை, அவர் கையாண்ட விதத்தை, அமித் ஷா பாராட்டிஉள்ளார்.
பல்வேறு மாநில கவர்னர்களும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்தின் நிரந்தர கவர்னராக ராஜேந்திர அர்லேக்கரை நியமித்து விட்டு, கேரளாவுக்கு, தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரை, கவர்னராக நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால்தான் தமிழக விவகாரங்களில் ராஜேந்திர அர்லேக்கர், அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், குறிப்பாக பல்கலை துணைவேந்தர் நியமன பிரச்னைக்கு சுமூக தீர்வு காண முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
