ADDED : நவ 26, 2025 07:31 AM

தமிழகத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பல்லாயிரம் வங்கதேசத்தினர், முறைகேடாக வாக்காளர் அடையாள அட்டை பெற்று இங்கு நடந்த தேர்தல்களில் பல முறை வாக்களித்துள்ளனர் என்ற தகவல், ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே, வெளிநாட்டினர் இந்திய தேர்தல்களில் வாக்களிப்பதை தடுக்க முடியும்.
தமிழகத்தில், 2011 - 2025, மே 25, வரை 17,770 வெளிநாட்டினர் விசா முடிந்தும், சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்றத்துறை, தமிழக அரசுக்கு குறிப்பு அனுப்பியுள்ளது. இந்த எண்ணிக்கையானது உரிய நடைமுறைகளின்படி விசா பெற்று நம் நாட்டிற்குள் வந்து, விசா காலம் முடிந்தபின்பும் வரும் வெளியேறாமல் இங்கேயே சட்டவிரோதமாக தங்கிவிட்டவர்கள் அல்லது தலைமறைவாகி விட்டவர்கள் தொடர்பானது. அதேவேளையில், விசா இல்லாமல் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து பதுங்கியிருக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கையை, குறிப்பாக வங்கதேசத்தினர் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமிருக்கலாம் என்கின்றனர், குடியேற்றத்துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், ஒசூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டட கட்டுமான பெருநிறுவனங்களில் உத்திரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தினர் அதிகளவில், குடும்பங்களுடன் நிறுவனங்களின் அருகேயே தங்கி பணியாற்றுகின்றனர்.
குறிப்பாக கோவை, திருப்பூர், சென்னை போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் அதிகளவில் தங்கியிருப்பதால், அந்த வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கிரிமினல்கள், பயங்கரவாதிகள், நக்சல்கள் ஊடுருவுவதும் தொடர்கிறது. திருப்பூரில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் ஆறு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டார். கேரளா போலீசாரால் தேடப்பட்ட தலைமறைவு மாவோயிஸ்ட்கள் ரூபேஷ் - ஷைனி தம்பதியரும் திருப்பூரில்தான் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்தான், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவர்கள் 'மேற்கு வங்கத்தவர்' போர்வையில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் போலி இந்திய அடையாள ஆவணங்களுடன் தங்கி பணியாற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டு கிளம்பி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த எச்சரிக்கை குற்றச்சாட்டை கிளப்பியவர், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா.
ஊடகங்கள் வாயிலாக புள்ளி விவரங்களை வெளியிட்ட அவர், 'அசாம், மேற்கு வங்கம் வழியாக நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினர் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் ஜவுளித்துறையில் பணிபுரிகின்றனர். சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்போரில் 10 சதவீதம் பேர் மட்டுமே சிக்குகின்றனர்; மற்ற நபர்கள் தப்பிவிடுகின்றனர்' என, ஒரு 'குண்டை' வீசியிருந்தார். அசாம் முதல்வரின் இந்த எச்சரிக்கையைச் தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறையினர் உஷார் அடைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
உளவுப் போலீசார் கூறுகையில், 'தொழில் வளம் மிக்க சென்னை, திருப்பூர், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் வங்கதேசத்தினர் பல்லாயிரம் பேர் ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கிறோம். இதுவரை கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரித்தபோது 6 - 10 ஆண்டுகள் வரை இங்கு தங்கியிருந்துள்ளனர், என்ற விவரம் தெரியவந்தது. இங்குள்ள ஏஜன்ட்களுக்கு பணம் கொடுத்து போலி ஆதார் கார்டு, காஸ் இணைப்பு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு என, பல வகை இந்திய அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளனர். இதற் காக, ரூ.5 ஆயிரம் முதல், ரூ.15 ஆயிரம் வரை செலவிட்டுள்ளனர். ஒரு ஆவணத்தை வைத்து பிற ஆவணங்களை எளிதாக வாங்கியுள்ளனர்' என்றனர்.
மெயின் ரூட் '24 பர்க்கானஸ்' ஊடுருவலுக்கான காரணம் குறித்து, எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வங்கதேசத்தில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் அங்கிருந்து பலரும் வெளியேறுகின்றனர். இந்தியாவில் அமைதி, வளம், வேலை வாய்ப்பு இருப்பதால் அவர்களது முதல் ஆர்வம் இந்தியாவாக உள்ளது. அசாம், மேற்கு வங்கம் எல்லை வழியாக, பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை மீறியும், சில நேரங்களில் மறைமுக ஒத்துழைப்புடனும்கூட இந்தியாவிற்குள் ஊடுருவுகின்றனர்.
'குறிப்பாக, மேற்குவங்கம், '24 பர்க்கானஸ்' என்ற இடத்தில் உள்ள, இந்திய - வங்கதேச எல்லையில் ஓடும் ஆற்றின் வழியாக உள்ளே நுழைகின்றனர். மேற்கு வங்கத்தில் சில வாரங்கள் தங்கி, இந்திய பிரஜையாக மாற்றி கொள்ள ஏஜென்ட் வாயிலாக போலியான ஆவணம் பெற்று கோல்கட்டாவில் வில் இருந்து ரயிலில் சென்னை வருகின்றனர். பின்னர் கோவை, திருப்பூர் வந்து, ஏஜென்ட்கள் வாயிலாக ஏதாவது ஒரு வேலையில் இணைந்து கொள்கின்றனர்' என்றார்.
இதன்பின்னணி குறித்து திருப்பூர் போலீசாரிடம் விசாரித்தபோது, 'சமீபத்தில் திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் பிடிபட்ட வங்கதேசத்தினர் பலருக்கும் பல்லடத்தைச் சேர்ந்த புரோக்கர் மாரிமுத்து என்பவர், அரசு டாக்டரிடம் கையெழுத்து பெற்று விண்ணப்பித்து, திருப்பூர் மாநகராட்சி மையத்தில் ஆதார் பெற்று கொடுத்தது தெரிந்தது; மாரிமுத்து கைது செய்யப்பட்டார். கடந்த 2018ல் திருப்பூர் அருகே நல்லுாரில், வங்கதேசத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்ட போது பீகாரைச் சேர்ந்த முன்னாள் ஆதார் மைய ஊழியர் ஒருவர் திருப்பூரில் தங்கி ஏராளமான போலி ஆதார் கார்டுகளை பெற்று கொடுத்தது தெரிந்தது. இதற்கு உடந்தையாக இருந்த அவிநாசியை சேர்ந்த மூவரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து கருவிழி பதிவுக்கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டன' என்றனர்.
ஆனால், போலி அடையாள ஆவணங்களை தயாரித்து வழங்கிய அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது போலீசாரின் நடவடிக்கை பாயவில்லை. காரணம், போலி ஆவணங்களை தயாரித்தல், அவற்றை உண்மையென நம்ப வைத்தல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தால், அந்த குற்றங்களை நிரூபிக்க போலீசார், தகுந்த ஆதாரங்கள், சாட்சிகளை திரட்டி கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். அதற்கு, வழக்கமான அன்றாட பணிகளை தவிர்த்து, தீவிரமாக பணியாற்ற வேண்டும். பல மாநிலங்களுக்கும் சென்று விசாரிக்க வேண்டும். வங்கதேச அரசிடம் இருந்து, 'பிடிபட்ட நபர்கள் எங்கள் நாட்டினர் தான்' என்பதற்கான ஆவணங்களையும் எழுத்துப்பூர்வமாக பெற வேண்டும். இதெல்லாம், அவ்வளவு 'லேசாக' நடக்கக்கூடிய காரியமில்லை என்பதால், 'போலி அடையாள ஆவண தயாரிப்பு' குற்றச்சாட்டுகளை முதன்மையானதாக்கி போலீசார் விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்திய தேர்தலில் ஓட்டு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையில் ஓட்டை, ஊடுருவல்காரர்கள் பிடிபட்டாலும் விசாரணையில் உண்மை மறைப்பு போன்ற காரணங்களால், வெளிநாட்டினரும், குறிப்பாக வங்க தேசத்தினரும் தமிழகத்தில் இந்திய வாக்காளர் அடையாள அட்டையினைப் பெற்று பல தேர்தல்களில் ஓட்டுப் போட்டும் வந்துள்ளனர். இது திருப்பூரில் பிடிபட்ட நபர்கள் வாயிலாகவும் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து வங்கதேசத்தினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தோம். 'நாங்கள் இந்திய பிரஜை தான்' என, ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை காட்டினர். சில நேரங்களில் அவர்களின் அந்த அடையாள அட்டை முகவரிகள் அசாம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. பலரும் முறைகேடாக பணம் கொடுத்து ஒரிஜனல் ஆதாரங்களை தயார் செய்துவிட்டனர். வெளிமாநிலங்களில் இருக்கும் முகவரிகளுக்கு நேரில் சென்று விசாரிப்பது, லோக்கல் போலீசாரை பொறுத்தவரை, வேலைப்பளு தான். அதனாலேயே, போலி ஆவண தயாரிப்பு 'ஆங்கிளில்' நாங்கள் பெரும்பாலும் விசாரிப்பதில்லை' என்றார்.
திருப்பூர் மாநகர், நல்லுாரில் சட்டவிரோதமாக பதுங்கியிருந்த முகமது ெஷரீப் காஜி என்பவர் கடந்த பிப்ரவரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்று வட்டாரத்தில், 17 ஆண்டுகளாக தங்கி, பனியன் கம்பெனி, கோழிப்பண்ணை, விசைத்தறி என பல இடங்களில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மும்பையில் சொந்த வீடும், தமிழகத்தில் ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் இருந்தன.
இதுபோக, மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹிங்ஹாய்கன்ச் (தொகுதி எண் - 126) சட்டசபை தொகுதியில், ZDE1062306 என்ற எண்ணுள்ள வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்தார். இதுபோன்று பல ஆயிரக்கணக்கானோர் மேற்கு வங்கத்தில், முறைகேடாக வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மேற்கு வங்கம் சென்று ஓட்டளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்நபரைப்போன்றே பலரும் வாக்காளர் அட்டையை பெற்று, இந்திய தேர்தல்களில் வாக்களித்து வந்துள்ளனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணியை முறையாக அமல்படுத்தினால், இவர்களைப் போன்ற வெளிநாட்டினரையும் பட்டியலில் இருந்து அறவே நீக்கிவிட முடியும். ஆனால், அதற்கு எதிராக தமிழகத்திலுள்ள தி.மு.க.,கூட்டணி கட்சிகளும், விஜய் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வருகின்றன. தங்களது எதிர்ப்பு வாதத்துக்கு இக்கட்சிகள் முன் வைக்கும் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள், வெளிநாட்டினரும் இந்திய தேர்தல்களில் ஒட்டளிக்க ஆதரவாக இருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை; இதை இங்குள்ள ஆட்சியாளர்களும், கட்சிகளும் உணர்வது எந்நாளோ?
நாடு கடத்துவதில் என்ன சிக்கல்
திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: ஊடுருவும் வங்கதேசத்தினரை தொடர்ந்து கண்காணிக்கிறோம். பிடிபடும் நபர் 'வங்கதேசத்தவர் தான்' என்பதற்கான ஆவணங்களை சேகரித்த பின் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறோம்.
கைது செய்யும் போது, அவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒத்து கொள்வதில்லை. விசாரணை நடத்தி தண்டனை காலம் அறிவிக்கப்பட்ட பின், அதற்குள் அந்நாட்டுக்கு அனுப்புவதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கும் சட்ட நடைமுறைகள் உள்ளன. தண்டனை பெற்றவர்களின் விவரங்களை வங்கதேசத்துக்கு அனுப்பி, 'அவர்கள் எங்கள் நாட்டவர் தான்' என, அந்நாட்டின் அரசு உறுதி செய்த பின் தான் அனுப்ப முடியும். அவர்கள் மறுத்து விட்டால் நாடு கடத்த இயலாது. இங்குள்ள வெளிநாட்டினர் முகாமில் தங்க வைக்க வேண்டும்.
இது வங்கதேசத்தினருக்கு மட்டுமல்ல, மற்ற வெளிநாட்டினருக்கும் பொருந்தும். இங்கு கைது செய்யப்படும் நபர்களுக்கான தண்டனை ஐந்து ஆண்டுகள் வரை கிடைக்கலாம். ஜாமினில் வெளியே வருவோர் முகாமில் அடைக்கப்படுகின்றனர். ஒரு சிலர் மட்டும் தான், தங் கள் குடும்பத்தை காரணம் காட்டி சட்டப்படி வெளியே வருவர். அவர்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் பற்றி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தரலாம், என்றார்.

