sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தொழிலாளர் சட்ட திருத்தம் யார்,யாருக்கு என்னென்ன சாதகம்?

/

தொழிலாளர் சட்ட திருத்தம் யார்,யாருக்கு என்னென்ன சாதகம்?

தொழிலாளர் சட்ட திருத்தம் யார்,யாருக்கு என்னென்ன சாதகம்?

தொழிலாளர் சட்ட திருத்தம் யார்,யாருக்கு என்னென்ன சாதகம்?

2


ADDED : நவ 26, 2025 07:52 AM

Google News

2

ADDED : நவ 26, 2025 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்கள், தொழிலாளர்களுக்கு நிறைய அனுகூலங்களை வழங்கியுள்ளன. அதேசமயம், நிறுவனங்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என, ஆடிட்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'தினமலர்' நாளிதழிடம் பகிர்ந்து கொண்டதாவது: தொழிலாளர் நலனுக்காக சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து 2019 முதலே விவாதிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் நலனுக்காக புதிதாக 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது, ஜி.எஸ்.டி.,க்குப் பிறகான மிகப்பெரிய சீர்திருத்தம்.

நான்கு சட்டங்கள்

தொழிலாளர் ஊதிய சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகிய நான்கு சட்டங்கள் புதிதாக அமலுக்கு வந்துள்ளன. தொழிலாளர்களுக்கு ஏராளமான நலன்களும், வேலையளிப்போருக்கு சீர்திருத்தங்களையும் இச்சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.

50 சதவீதத்தினர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இந்த வலிமை, 2047ல் நாம் வல்லரசாக மாற்றுவதற்கான சாத்தியங்களை அளிக்கிறது. இச்சூழலில், தொழிலாளர் நலனுக்கான சீர்திருத்தங்கள் அவசியம்.

இலவச மருத்துவ பரிசோதனை

வேலைக்குச் சேர்வோருக்கு நியமனக் கடிதம் கட்டாயம் கொடுக்க வேண்டும். 'கிக்' தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., குறைந்தபட்ட ஊதியம் உள்ளிட்ட அனுகூலங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஊதியம் என்பது, அனைவருக்கும் பொருந்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியருக்கும், இலவச மருத்துவ பரிசோதனை கட்டாயம். பெண்களும் விருப்பத்துடன், இரவு ஷிப்ட்களில் பணிபுரியலாம்; சம வாய்ப்பு, சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். 10 வேலையாட்களுக்கு குறைவாக இருப்பினும், இ.எஸ்.ஐ., காப்பீடு பாதுகாப்பு பெறமுடியும். ஓராண்டு பணி நிறைவு செய்தாலே கிராஜுவிட்டி வழங்க வேண்டும் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

நிறுவனங்களுக்கு...

தொழில் நிறுவனங்களுக்கு நாடு முழுக்க ஒரே பதிவு கொண்டு வரப்பட்டுள்ளது. கிராஜுவிட்டி, இ.எஸ்.ஐ., செலவினங்கள் அதிகரிப்பதால், நிறுவனங்கள் தங்களது பணப்புழக்கத்தை திட்டமிட வேண்டியிருக்கும். சேவைத் துறை, எம்.எஸ்.எம்.இ., பெரிய தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் தொழிலாளருக்கான செலவினம் கூடுதலாகும். இதற்கான நிதித்திட்டங்களை நிறுவனங்கள் தயா ர் செய்து கொள்வது அவசியம். புதிய சட்ட திருத்தத்தில் என்னென்ன மாற்றங்கள் உள்ளன. அவை, தங்களது நிறுவனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஒவ்வொரு நிறுவனமும், அறிந்து கொள்ள வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ.,

குறைந்தபட்ச ஊதிய சட்டம், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பொருந்தும். ஐ.டி., ஐ.டி., சார் நிறுவனங்கள் 7ம் தேதிக்கு முன்பாக ஊதியம் வழங்கிவிட வேண்டும். எம்.எஸ்.எம்.இ., ஊழியர்களுக்கு, சாதகமான நிலை உருவாகியுள்ளது. நிறுவனங்களையும் நெருக்கி விடக்கூடாது. அதேசமயம் ஏழை -- பணக்காரன் இடைவெளி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பு ஏன்

மூட அல்லது ஆட்குறைப்புக்கு முன், அரசின் அனுமதி தேவை என்ற வரம்பு 100 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் என்பதில் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது போன்ற சட்டவிதிகளை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன.

சாதகங்களை அறியணும்

இச்சட்டத்திருத்தத்தால் தங்களுக்கு என்னென்ன சாதகங்கள் என்பதை, தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நிறுவனங்கள், சட்டவிதி, நிதி கையாள்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஓவர்டைமுக்கு இரட்டிப்பு சம்பளம் என கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கான கூடுதல் செலவினத்தால், நிறுவனங்களின் போட்டித் தன்மை குறைந்துவிடக்கூடாது.

நிறுவனங்கள் நன்றாக இருந்தால்தான், தொழிலாளர்களின் தேவையும் பூர்த்தியாகும். சம்பளம், பணிச்சூழல், சமூக பாதுகாப்பு என அனைத்து வகையிலும் தொழிலாளர் நலனை இச்சட்டங்கள் உறுதி செய்கின்றன. வல்லரசாக மாற வேண்டும் எனில், இருதரப்பும் இணைந்து செயல்பட்டால்தான் சாத்தியமாகும். நிறுவனங்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us