கைப்பாவை டி.ஜி.பி.,க்காக அரசு வெயிட்டிங்: பழனிசாமி
கைப்பாவை டி.ஜி.பி.,க்காக அரசு வெயிட்டிங்: பழனிசாமி
UPDATED : நவ 25, 2025 05:15 AM
ADDED : நவ 25, 2025 05:14 AM

சேலம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி:
ஒரு டி.ஜி.பி., ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன், பட்டியல் தயாரித்து, மத்திய பணியாளர் தேர்வு வாரியத்துக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும்.
அதில், மூவரை தேர்வு செய்து, வாரியம் அனுப்பும். அந்த மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கும். இந்த நடைமுறை தான், கடந்த கால தி.மு.க., ஆட்சியிலும், அ.தி.மு.க., ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்பட்டன. இப்போது, தி.மு.க., அரசுக்கு தடுமாற்றம் ஏன்?
இது பற்றி கேள்வி எழுப்பினால், 'எனக்கு அருகதை இல்லை' என்கிறார், அமைச்சர் ரகுபதி. தங்கள் கைப்பாவை ஒருவரை நிரந்தர டி.ஜி.பி.,யாக்க வேண்டும் என்பதற்காகவே தாமதப்படுத்துகின்றனர்.
ஏற்கெனவே மத்திய பணியாளர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பிய பட்டியலில் இருப்பவர்கள், தங்களுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என கருதுவதால் தான், தி.மு.க., அரசு நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிக்கவில்லை.
அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, பி.எல்.ஓ.,க்களிடம் கட்டு கட்டாக எஸ்.ஐ.ஆர்., படிவத்தை வாங்கி உள்ளனர்.
அப்பார்ட்மென்ட் வீடுகளில் உள்ளவர்களின் படிவத்தை, தி.மு.க.,வினரே கையெழுத்திட்டு வழங்குகின்றனர். இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

