ஹிந்தி எதிர்ப்பை வைத்து மலிவான அரசியல்; தி.மு.க., மீது கவர்னர் ரவி மறைமுக தாக்கு
ஹிந்தி எதிர்ப்பை வைத்து மலிவான அரசியல்; தி.மு.க., மீது கவர்னர் ரவி மறைமுக தாக்கு
ADDED : நவ 25, 2025 05:30 AM

சென்னை: ''தமிழகத்தில் சில சக்திகள், தமிழ் மொழியை வெறுப்பு பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றன,'' என, கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
'தமிழ் ஜனம்' செய்தி தொலைக்காட்சிக்கு, அவர் அளித்த பேட்டி:
தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. இங்கு தேச விரோத சிந்தனைகளும், பயங்கரவாத போக்கும் நிலவுகின்றன.
புலம்பெயர் தொழிலாளர் இதை செய்வோர், எவ்வித நடவடிக்கைகளையும் சந்திக்காமல் வலம் வருகின்றனர். என்.ஐ.ஏ., அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை விட, தமிழகத்தில் நிலவும் அரசியல் கலாசாரம் கவலை தருகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து, தமிழகம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறது; இது நல்லதல்ல.
எனது பேச்சுகள் தொடர்ந்து திரிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் எதிர்ப்பாளராக என்னை சித்தரிக்க முயல்கின்றனர்.
ஆனால், நான் செல்லும் இடங்களில் அப்படியொரு சூழல் இல்லை. தமிழக மக்கள் என் மீது அன்பைப் பொழிகின்றனர். அவர்களின் பாசத்தால் திக்குமுக்காடுகிறேன். நான் தமிழ் எதிர்ப்பாளராக இருந்தால், இப்படியொரு வரவேற்பு எனக்கு கிடைக்காது.
கடந்த 2022, 23ல், தமிழக மூத்த அமைச்சர்கள் சிலர், 'பீஹார் தொழிலாளர்கள் பானி பூரி விற்பதற்குதான் லாயக்கு' என பேசினர். கடந்த 2023 ஏப்ரலில், பீஹார் மக்களை விமர்சித்து, தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்களை, நான் பாதுகாத்து வைத்துள்ளேன். பழைய கதையை, நான் பேச விரும்பவில்லை.
ஒரு கட்சி தலைவரின் புகைப்படத்துடன் வெளிவந்த போஸ்டரில், 'ஹிந்தி பேசுவோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்' என, கெடு விதித்திருந்தனர்.
அதன்பின், பீஹார் தொழிலாளர்கள், தமிழகத்தை விட்டு வெளியேற துவங்கினர். அவர்கள் இன்னும் அச்சத்தில் இருக்கின்றனர்.
அவர்கள் வர தயங்கியதால், தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதன்பின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவை என்பதை உணர்ந்து, மீண்டும் அவர்களை வரவழைக்க முயற்சி மேற்கொண்டனர்.
ஐரோப்பிய சிந்தனை மலிவான அரசியல் தான் இதற்கு காரணம். தமிழ் கலாசாரத்தை, மொழியை அழிக்க வந்திருக்கின்றனர் எனப் பேசி, மக்களிடையே ஒரு கற்பனை பயத்தை ஏற்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் வடக்கு எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு அடிப்படையில், மலிவான அரசியல் நடத்தப்படுகிறது. இதை நான் ஏற்கவில்லை. மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழக அரசியலுக்கு, ஒரு சிறு அளவு பிராந்தியத்துவம் தேவை.
திராவிடர் ஒரு தனி இனம் என்கின்றனர். தமிழ் மொழி, மற்ற மொழிகளுடன் தொடர்பு இல்லாதது எனக் கூறுகின்றனர். இவை அனைத்தும், ஐரோப்பிய சிந்தனையாளர்களால் விதைக்கப்பட்டது. ஜெர்மன் நாஜியின் இனக் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருத்து.
வெறுப்பு பிரசாரம் ஹிந்தி எதிர்ப்பு என்பது, இங்கே ஒரு அரசியல் சூழ்ச்சி. தமிழகத்தில் 35 சதவீதம் பேர் மொழி சிறுபான்மையினர். அவர்கள் தங்கள் தாய் மொழியை, பள்ளிகளில் கற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை.
தமிழ் தவிர, எல்லா மொழிகளும் வெறுக்கப்படுகின்றன. மொழி சிறுபான்மையினர், தங்கள் வீடு தவிர, வெளியே தங்கள் மொழியை பேச அச்சப்படுகின்றனர்.
ஆனால், தமிழ் மொழியை மேம்படுத்த, எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ் மீடியம் பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் வெளியேறி, ஆங்கிலப் பள்ளிகளில் சேருகின்றனர். உயர் கல்வியை தமிழில் கற்போர் குறைந்து வருகின்றனர்.
கடந்த 1981ல் அமைக்கப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலை பரிதாபமான நிலையில் உள்ளது. யு.ஜி.சி., விதிகளின்படி, குறைந்தது 1,000 மாணவர்கள் இருக்க வேண்டும். அதனால், பிஎச்.டி., ஆய்வாளர்கள் என சிலரை சேர்த்து, கணக்கு காட்டுகின்றனர்.
தமிழ் பல்கலையில், 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ் பல்கலையை நிறுவியவர் எம்.ஜி.ஆர்., என்பதால், இன்றைய அரசு பல்கலையை முன்னேற்றுவதில் அக்கறை காட்டவில்லை.
தமிழக பல்கலைகளில், பாரதியார் பெயரில், ஒரு இருக்கை கூட இல்லை. ஆனால், திராவிட தலைவர்களின் பெயரில் 15 இருக்கைகள் உள்ளன.
கருணாநிதி பெயரில் இரண்டு இருக்கைகள் உள்ளன. இது குறித்து, துணைவேந்தர்களிடம் கேட்டால், அமைச்சர்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன என்கின்றனர்.
குழப்பம் ஆனால் டில்லி பல்கலையில், பாரதியார் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆவண காப்பகத்தில், மூன்று சதவீத ஆவணங்கள்கூட டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை.
வரலாறு தங்கள் முகத்தை வந்து தாக்கும் என்பதால், அதை பாதுகாக்க, இந்த அரசு விரும்பவில்லை. இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது.
நம் நாட்டில் பேச்சு மற்றும் எழுத்துரிமைகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஆப்பரேஷன் சிந்துாரை குறை கூறுகின்றனர். சந்தேகம் எழுப்புகின்றனர்.
வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில், இம்மாதிரி திட்டமிட்ட வாதங்களை வைக்கின்றனர். இந்தியாவை பலவீனப்படுத்த, நமது அரசியல் அமைப்பை தாக்குகின்றனர்.
ராணுவம், தேர்தல் கமிஷன், நீதித்துறை குறித்து மக்களிடையே அவநம்பிக்கையை தோற்றுவித்து, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த, சிலர் முயற்சிக்கின்றனர். மக்களின் உறுதியை குலைக்க பார்க்கின்றனர். இதில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

