அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு: பா.ஜ., எதிர்ப்பு
அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு: பா.ஜ., எதிர்ப்பு
ADDED : ஆக 24, 2025 04:01 AM

திருச்சூர்: கேரள மாநிலம், பம்பையில் செப். 20ல் நடக்கும் உலக அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்மாநில அரசுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சபரிமலைக்கு மண்டல பூஜை காலத்தில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் 20ல் கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார்.
'இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்' என தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், கடந்த 21ல் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, நேற்று முன்தினம் சென்னை வந்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அய்யப்ப சங்கம விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இதற்கு கேரள பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
'சபரிமலையில் இளம் வயது பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2018ல் ஆட்சியில் இருந்த முதல்வர் பினராயி பெண்கள் சபரிமலை செல்ல அனுமதித்தார்.
இதன்மூலம் சபரிமலையின் பாரம்பரியத்தை முறியடித்ததுடன், இதை எதிர்த்து போராடிய அய்யப்ப பக்தர்கள் பலரையும் பினராயி சிறையில் அடைத்தார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியும் ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்தினர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் ஓட்டு வங்கியை அதிகரிக்கும் நோக்கில், அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது சர்வாதிகாரி ஹிட்லர், யூதர்களை கொண்டாடுவதற்கு ஒப்பானது. 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்.,- தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள், சபரிமலை நிகழ்ச்சியில் பங்கேற்பது உண்மையானது அல்ல.
தேர்தலில் ஓட்டுகளை பெற நடத்தும் நாடகம். இது, ராகுல் உண்மையைப் பேசுவதற்கு இணையானது. ஒசாமா பின்லேடன் அமைதியின் துாதராக மாறுவதற்கு இணையானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.