அணை கட்டுவது இயற்கைக்கு மாறானது: கரிகால சோழனுக்கு எதிராக சீமான் முழக்கம்
அணை கட்டுவது இயற்கைக்கு மாறானது: கரிகால சோழனுக்கு எதிராக சீமான் முழக்கம்
ADDED : நவ 17, 2025 12:01 AM

தஞ்சாவூர்: ''ஆட்சிக்கு வந்தால், நமக்கு தேவையான ஆயிரம் டி.எம்.சி., தண்ணீருக்கு மேல், கூடுதலாக 500 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுாரில் நேற்று முன்தினம் நடந்த தண்ணீர் மாநாட்டில் அவர் பேசியதாவது:
நாம் தமிழர் மட்டுமே பல வித்தியாசமான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது.
பைத்தியங்கள் அதை பைத்தியக்காரத்தனம் என இங்கு அரசியல் நடத்தும் சில பைத்தியங்கள் விமர்சிக்கின்றன. நாங்கள் பைத்தியங்கள் அல்ல.
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியர்கள். நாம் எடுக்கும் எந்த முன்னெடுப்புகளுக்கும் அருகில் கூட, அந்த பைத்தியங்களால் வர முடியாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் அரசியல் செய்து விட்டு சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்து, அரசியல் செய்ய இங்கு நான் வரவில்லை. எனக்கென தனி பாதை வகுத்து செயல்படுகிறேன்.
உயிரிலும் மேலானது உரிமை என்பதே எங்கள் கோட்பாடு. மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே மற்ற அரசியல் கட்சிகள் நினைப்பு. ஆனால், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என நாம் தமிழர் அரசியல் செய்கிறது.
கரிகால பெருவளத்தான் கல்லணையில் பெரிய அணை கட்டி தண்ணீரை தடுத்து இருக்கிறார். ஆனால், அணையை கட்டி நீரை தடுப்பது இயற்கைக்கு முரணானது.
இந்த அடிப்படை கோட்பாடு கூட தெரியாமல் தான், அந்த காலத்தில் அணை கட்டி நீரை தடுத்துள்ளனர். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து விட்டால், பெரிய பெரிய அணை கட்ட மாட்டோம்; தடுப்பணை மட்டுமே கட்டுவோம்.
ஆயிரம் ஏக்கர் ஏரி கர்நாடகாவில் இருந்து காவிரியில் 150 டி.எம்.சி., தண்ணீர் பெற முடியாமல் தவித்து வருகிறோம். ஆனால், அது குறித்த எந்தக் கவலையுமின்றி, தமிழக ஆட்சியாளர்கள் சுற்றி வருகின்றனர்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், வீராணம் ஏரியை துார்வாரி, குழாய் மூலம் தண்ணீரை காவிரி படுகைக்கு கொண்டு வந்து, நிலங்களை வளமாக மாற்றுவேன்.
துாய்மையான தண்ணீரை மக்களுக்கு கொடுப்பது அரசின் கடமை. ஆனால், உலக வர்த்தக அமைப்பின் பார்வையில் தண்ணீர், மின் உற்பத்தி, கல்வி, போக்குவரத்து ஆகியவை அரசின் வேலை அல்ல.
அந்த தொழிலை அரசு செய்யாமல், கையெழுத்து போட்டு முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, கமிஷனுடன் பேசாமல் இருக்க வேண்டும்.
நான் ஆட்சிக்கு வந்தால், நமக்கு தேவையான ஆயிரம் டி.எம்.சி., தண்ணீருக்கு மேல், கூடுதலாக 500 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பேன்.
போர்க்கால அடிப்படையில், ஆயிரம் ஏக்கரில் ஏரி வெட்டுவேன். நீரை சேமிக்காமல், கடலில் வீணாக்கி விட்டு, 50 ஆயிரம் கோடி ரூபாயில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேவையா?
இவ்வாறு சீமான் பேசினார்.

