கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு: அரசு காசு கொடுத்து வாங்கி வினியோகிக்குமா?
கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு: அரசு காசு கொடுத்து வாங்கி வினியோகிக்குமா?
ADDED : மார் 11, 2025 07:44 AM

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன்படி, கார்டுதாரர்கள் தங்களின் அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட எடையில் அரிசிக்கு பதிலாக கோதுமை வாங்கலாம்.
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுக்கு, 5 - 10 கிலோ; மற்ற இடங்களில், 5 கிலோ வரை கோதுமை வழங்கப்பட்டது. தமிழகத்தில், 18 - 69 வயது உடையவர்களில், 30 சதவீதம் பேர் ரத்த அழுத்தம்; 18 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் உட்பட பலரும், இரவில் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதனால், ரேஷனில் அரிசி வாங்காதவர்கள் கூட, கோதுமை வாங்குகின்றனர். மத்திய அரசு கடந்த மாதம் வரை ரேஷனில் வழங்க, தமிழகத்திற்கு 17,100 டன் கோதுமை ஒதுக்கீடு செய்தது. இம்மாதத்தில் இருந்து, 8,576 டன்னாக குறைத்துள்ளது. இதனால் கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கோதுமை மட்டுமே வழங்கப்படுகிறது. கோதுமை கிடைக்காத கார்டுதாரர்கள் பலரும், கூடுதல் கோதுமை கேட்டு, ஊழியர்களுடன் தகராறு செய்கின்றனர்.
எனவே, நீரிழிவு நோயாளிகளின் மருந்து செலவை குறைக்க, முதல்வர் மருந்தகம் துவக்கியது போல, அரசு பணம் கொடுத்து கோதுமை வாங்கி, மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஒரு கடையில் கோதுமை வாங்கும், 500 கார்டுதாரர்கள் இருந்தால், 200 பேருக்கு தான் அனுப்பப்படுகிறது'
'அதுவும் முதலில் வருபவர்களுக்கு வழங்கப்படுவதால், பலர் கோதுமை கிடைக்கவில்லை என்று தகராறு செய்கின்றனர். எனவே, தமிழக அரசு சொந்த நிதியில், கூடுதலாக கோதுமை வாங்கி, கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்' என்றனர்.