உயிருடன் இல்லாதவர் தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
உயிருடன் இல்லாதவர் தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : மார் 18, 2025 07:07 AM

புதுடில்லி: உயிருடனே இல்லாத ஒருவர் தொடர்புடைய வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிப்பது எனக்கூறி, 10 ஆண்டு பழைய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழக பத்திர பதிவுத்துறையில் பணியாற்றியவர் அனுசியா அண்ணாமலை; 1997ல் பணி ஓய்வு பெற்றார். 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு மூன்று ஆண்டு கால பதவி உயர்வை, தமிழக அரசு வழங்கவில்லை என்றும், அதற்கு உண்டான பண பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனிநபர் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்த நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. மேலும், மனுதாரருக்கு அவர் இழந்த மூன்று ஆண்டுகளுக்கான பணபலன்களை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'சம்பந்தப்பட்ட மனுதாரர், தனக்கு பதவி உயர்வு கிடைத்தால், வேறு இடத்திற்கு பணி மாற்றப்படலாம் என்ற காரணத்துக்காக, பதவி உயர்வே வேண்டாம் என்றார். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
'இதை, ஒரு தனி நபர் சார்ந்த விவகாரம் என, எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த ஒரு தீர்ப்பை வைத்து மேலும் பலர் இது போன்று மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது' என்றனர்.
அப்போது ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மனுதாரர் தற்போது உயிருடனே இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து, 'ஒருவர் உயிருடன் இல்லாத சூழலில், அவர் தொடர்பான வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்' எனக்கூறி, வழக்கை முடித்தனர்.