மாநில மின்வாரியங்களின் கடனை அடைக்க ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டும் மத்திய அரசு
மாநில மின்வாரியங்களின் கடனை அடைக்க ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டும் மத்திய அரசு
ADDED : அக் 30, 2025 11:56 PM

புதுடில்லி:  நாடு முழுதும் மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வரும் மின்வாரியங்கள் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் தத்தளித்து வருவதால், அவற்றை மீட்டெடுப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டுவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின்வாரியங்களை அரசே ஏற்று நடத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், கடன் சுமையில் இருந்து மீள, மின் வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை முன்னெடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்தது.
எதிர்ப்பு இதற்கு மின்வாரிய ஊழியர்கள், மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் மின்வாரியங்களின் கடன் தொகை அளவுக்கு அதிகமாக உயர்ந்து விட்டது.
எனவே, அவற்றை கடன் சுமையில் இருந்து மீட்டெடுக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டும் புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அதன்படி மாநில அரசுகள் தங்களது மின் வாரியத்தை முழுதாக தனியார்மயமாக்க வேண்டும்.
மின்வாரிய நிர்வாக கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால், அதன் பங்குகளை பங்குச்சந்தைகளில் பட்டியலிட வேண்டும் என மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுத்து இருப்பதாக மத்திய மின்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய மின் அமைச்சகமும், நிதி அமைச்சகமும்  இணைந்து விவாதித்து இறுதி செய்யவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு வகுத்துள்ள இந்த புதிய கருத்துருவின்படி, மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் குறைந்தபட்சம் 20 சதவீதமாவது தனியார்மயமாக்கப்பட வேண்டும். தவிர, தனியாரின் சில கடன்களையும் மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.
மின்வாரியத்தை தனியார்மயமாக்க அனுமதிப்பதன் மூலம் கடன்களை அடைப்பதற்கு மாநில அரசுகள் இரு வழிகளை தேர்ந்தெடுக்க முடியும்.
முதலாவதாக, மாநில அரசுகள் மின் வினியோகத்திற்காக புதிய நிறுவனத்தை உருவாக்கி, அதன் 51 சதவீத பங்குகளை விற்பனை செய்வது.
இதன் மூலம் தனியார்மயமாக்கப்பட்ட அந்த புதிய நிறுவனத்தின் கடன்களை அடைக்க 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் தொகை கிடைக்கும். அத்துடன் மத்திய அரசிடம் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
இரண்டாவதாக, ஏற்கனவே இருக்கும் மாநில அரசு மின்வாரியத்தின் 26 சதவீத பங்குகளை விற்பது.
அதற்கு பிரதிபலனாக மத்திய அரசின் குறைந்த வட்டி கடன்கள் ஐந்து ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
தனியார்மயமாக்க விருப்பம் இல்லாத மாநில அரசுகள், மூன்று ஆண்டுகளுக்குள் மின்வாரிய பங்குகளை பங்குச்சந்தைகளில் பட்டியலிட வேண்டும்.
இதன் மூலம் உட்கட்டமைப்பு மேலாண்மைக்காக மத்திய அரசிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
கடன் தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருவதால், அதை சமாளிக்கவும் மத்திய அரசு ஒரு திட்டம் வைத்திருக்கிறது. அடுத்து வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அதற்கான முக்கிய சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

