ஜாதி பெயர்களை குறிப்பிடாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு
ஜாதி பெயர்களை குறிப்பிடாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு
ADDED : ஆக 15, 2026 05:07 AM

- நமது சிறப்பு நிருபர் -
ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது வழங்கப்படும் கேள்வித்தாளில், ஜாதிப்பெயர்கள் இல்லாமல் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதை மாற்றுமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
40 கேள்விகள்
முதற்கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கடந்த 2011ல், மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட படிவத்தில் 29 கேள்விகள் இடம்பெற்ற நிலையில், இந்த முறை 40 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
மக்களின் மதம் மற்றும் அவர்கள் பட்டியல் இனத்தவாரா அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவரா என்ற விபரங்களை பதிவு செய்ய கணக்கெடுப்பாளர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வலியுறுத்தல்
திருமணம், மனைவி, குழந்தைகள் தொடர்பான விபரங்களுடன், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் கணக்கெடுப்பு படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஜாதி என்ற கேள்விக்கு மக்கள் குறிப்பிடும் ஜாதி பெயரை அப்படியே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாதிப் பெயர்களை குறிப்பிடாமல், கணக்கெடுப்பு படிவம் தயாரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மற்றும் பீஹாரில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
