சர்வதேச பயணியர் போக்குவரத்தில் பின்தங்கிய சென்னை விமான நிலையம்: முன்னேற்ற பாதைக்கு செல்ல திட்டங்கள் அமலாகுமா?
சர்வதேச பயணியர் போக்குவரத்தில் பின்தங்கிய சென்னை விமான நிலையம்: முன்னேற்ற பாதைக்கு செல்ல திட்டங்கள் அமலாகுமா?
ADDED : மே 02, 2025 04:35 AM

சர்வதேச பயணியர் இலக்கை எட்ட முடியாமல், சென்னை விமான நிலையம் திணறி வருகிறது. முன்னேற்றப் பாதைக்கு செல்ல, ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு, தினமும், 50,000க்கும் அதிகமான பயணியர் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு, 3.5 கோடி பேரை கையாளும் வகையில், புதிதாக இரண்டாம் கட்ட சர்வதேச முனையம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. எனினும், சர்வதேச பயணியர் போக்குவரத்தில், சென்னை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில், பல விமான நிலையங்கள் பின்னுக்கு சென்றன. அதன்பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், சென்னை விமான நிலையம், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
நல்ல வளர்ச்சி
இது குறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது: கடந்த 2018 - 19 காலகட்டத்தில், சர்வதேச விமான சேவையில் சென்னை விமான நிலையம் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது. கொரோனா காலத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் விமான சேவை துவங்கிய போதும், சர்வதேச பயணியர் போக்குவரத்தில் சென்னை விமான நிலையம் பெரிய முன்னேற்றம் காணவில்லை.
டில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உளளிட்ட விமான நிலையங்கள், கொரோனாவுக்குப் பின், சர்வதேச விமான பயணியர் சேவையில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. புதுப்புது இடங்களுக்கும் சேவை கிடைக்கிறது. இதனால், அந்த விமான நிலையங்களில் இருந்து, வெளிநாடுகளுக்கு பயணிப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து பாரீஸ், டோக்கியோ, ரீயூனியன் தீவுகள் உட்பட பல இடங்களுக்கு கொரோனாவுக்கு முன், நேரடி விமான சேவை இருந்தது. பயணியர் அதிகமாக வந்து சென்றனர். கொரோனாவுக்குப் பின், சர்வதேச பயணியர் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. நிறுத்தப்பட்ட பல சேவைகள் மீண்டும் துவக்கப்படவில்லை.
உதாரணமாக, சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ செல்ல வேண்டும் என்றால், டில்லி சென்று அங்கிருந்து வேறு விமானத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. இப்படி செல்லும் பயணியர், டில்லி விமான நிலைய கணக்கில் சேருவர். சென்னை இடம் பெறாது. இவ்வாறு பல விமான நிலையங்களுக்கு சென்று மாறுவதால், சென்னையின் சர்வதேச போக்குவரத்து பறிக்கப்படுகிறது.
சேவை இல்லை
சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததும், பயணியர் எண்ணிக்கை சரிவுக்கு முக்கிய காரணமாகும். எனவே, மத்திய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சகம், விமான நிறுவனங்களுடன் பேசி, புதிய சேவைகளை துவங்க முயற்சி எடுத்தால் மட்டுமே, சென்னை விமான நிலையம், பழைய பயணியர் எண்ணிக்கையை எட்ட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: மற்ற நாடுகளுக்கும், சென்னைக்கும் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவைகளை, மீண்டும் செயல்படுத்த விமான போக்குவரத்து ஆணையம் சார்பில், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். விமான நிறுவனங்கள், விமானங்களை தரையிறக்கவும், புறப்படவும் விரும்பி கேட்கும் நேரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புது வழித்தடம் தொடர்பான பரிந்துரைகளையும், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளோம். இழந்த எண்ணிக்கையை மீட்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

