வேட்பாளர் தேர்வில் 'கிறிஸ்டோபர் பார்முலா': ராகுல் திட்டத்தால் தமிழக காங்கிரசார் அதிர்ச்சி
வேட்பாளர் தேர்வில் 'கிறிஸ்டோபர் பார்முலா': ராகுல் திட்டத்தால் தமிழக காங்கிரசார் அதிர்ச்சி
ADDED : மார் 11, 2026 06:10 AM

சென்னை: ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளதால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி ஒதுக்கப்பட்டது. இப்பதவிக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., செல்லக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் முயற்சித்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மாணிக்கம் ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்பட்டார். இவர், காங்கிரசில் அகில இந்திய செயலராக இருந்தாலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளால் பெரிதும் கண்டுகொள்ளப்படாதவர்.
ஆனாலும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க நினைத்த ராகுல், கிறிஸ்டோபரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு 28 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக உள்ள 17 பேர் மட்டுமின்றி, பலரும் தொகுதிகளைப் பெற முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் கிறிஸ்டோபரை தேர்வு செய்தது போல, 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, ராகுல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக, டில்லி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில், வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறார்.
அதனால்தான், கடந்த 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறை தொகுதிக்கு முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசர், தரவு மற்றும் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போன்ற தலைவர்கள் பலர் முயன்றபோது, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்த சுதாவை நிறுத்தினார்.
அதுபோலதான், 28 சட்டசபைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் விரும்புகிறார். எனவே, காங்கிரஸ் வேட்பாளர்கள், எளிய சமூக, பொருளாதார பின்னணி கொண்டவர்களாக, களப்பணியில் திறன் கொண்டவர்களாக இருப்பர்.
இதனால், மயிலாடுதுறை ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்புபோல, வரும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

